மக்கள் விரோத நடவடிக்கைகள் தான் இன்றைய திமுக அரசின் இரண்டு ஆண்டுகால ஆட்சியின் சாதனையாக பார்க்க முடிகிறது என்று சசிகலா தெரிவித்திருக்கிறார்.  இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 


”பேரறிஞர் அண்ணா 15.5.1967-ல் ரூபாய்க்கு ஒரு படி அரிசித் திட்டத்தை அமலுக்குக் கொண்டுவந்தார். அதைப் பின்பற்றி எம்.ஜி.ஆர். தனியார் கடைகளில் பகுதி நேரமாக இயங்கி வந்த ரேஷன் கடைகளையெல்லாம் நேரடியாக அரசு சார்பில் செயல்படும் வகையில் 22 ஆயிரம் முழுநேர ரேஷன் கடைகளைத் திறந்தார் அனைவருக்கும் நியாய விலைக் கடைகளில் அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், பாமாயில், கோதுமை, ரவை, மைதா போன்றவற்றை மானிய விலையில் வழங்கினார்.


ஜெயலலிதா விலையில்லா அரிசி திட்டத்தை கொண்டு வந்தார். எனவே, பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர்களது ஆட்சி அனைவருக்கும் உணவு என்கிற திராவிட சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட ஆட்சியாக விளங்கியது.


தி.மு.க. ஆட்சியில் என்ன நடக்கிறது?


ஆனால், இன்றைய திமுக ஆட்சியில் என்ன நடக்கிறது? சாமானிய மக்களுக்கு வழங்க வேண்டிய ரேஷன் அரிசி தரமற்று இருப்பதும், விலையில்லா அரிசி கடத்தப்படுவதை கண்டும் காணாமல் இருப்பதும், ரேஷன் கடைகளில் பிளாஸ்டிக் அரிசி விநியோகிப்பதும் ரேஷன் கடைகளில் மற்ற பொருட்களையும் வாங்கினால்தான் அரிசி வாங்கமுடியும் என்று சாமானிய மக்களை நிர்பந்திப்பதும் தான் காண முடிகிறது. இது எவ்வாறு திராவிட மாடல் ஆட்சியாக இருக்க முடியும்?


பேரறிஞர் அண்ணா ஆட்சிக்காலத்தில் பேருந்துகள் அரசுடைமை ஆக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர், அம்மா ஆகியோர் அரசு போக்குவரத்து கழகத்தை முன்னேற்றினார்கள். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு எண்ணற்ற சலுகைகளை வழங்கி அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தினார்கள் ஆனால், இன்றைய திமுக ஆட்சியில் என்ன நடக்கிறது? அரசு போக்குவரத்து கழகத்தை அழிக்கும் வகையில் தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்க அனுமதி வழங்குகிறீர்கள். இதுபோன்று போக்குவரத்து தொழிலாளர்களை நசுக்குவது எவ்வாறு திராவிட மாடல் கட்சியாக இருக்க முடியம்?


இது திராவிட மாடலா?


இன்றைய திமுக ஆட்சியில் என்ன நடக்கிறது? ஏழை எளிய சாமானிய மக்களின் வீடுகளை காலி செய்து வீதியில் நிறுத்துகிறார்கள். இது எவ்வாறு திராவிட மாடல் ஆட்சியாக இருக்க முடியும்?. மேலும், இன்றைக்கு தி.மு.க.வினர் என்ன செய்தனர்? பெண்களின் வாழ்வாதாரத்திற்கு பேருதவியாக இருக்கும் அம்மா உணவகத்தை எப்படி மூடுவது என்று செயல்படுகிறார்கள். இது எவ்வாறு திராவிட மாடல் ஆட்சியாக இருக்க முடியும்? 


பெண்களுக்கு பேருதவியாக இருந்த இந்த திட்டத்தை மூடுவிழா நடத்துகிறார்கள். மேலும் பெண்களை எந்த அளவுக்கு இழிவு படுத்துகிறீர்கள். திமுகவை சேர்ந்த மூத்த அமைச்சரே பெண்களை ஓசியில் பயணம் செய்கிறவர்கள் என்று ஏளனமாக பேசுகிறார். இது எவ்வாறு திராவிட மாடல் ஆட்சியாக இருக்க முடியும்?


தமிழகத்தில் இடம் ஏது?


இன்றோ என்ன நிலைமை? திராவிடம் என்பதே இல்லை என்றும், இது ஒரு காலாவதியான கொள்கை என்ற பேச்சுக்கள் நம் காதில் விழுவது வேதனை அளிக்கிறது. இது நமது திராவிட தலைவர்களையும் இழிவு படுத்துகிற ஒரு செயலாகும். இது போன்ற கருத்துகள் உருவாவதற்கு யார் காரணம்? இன்றைய திமுக தலைமையிலான அரசின் தவறான நடவடிக்கைகளும், மக்கள் விரோத செயல்பாடுகளுமே தவிர வேறொன்றும் இல்லை. திராவிட கொள்கைகளைப் பற்றி இழிவாக பேச காரணமாக விளங்கும் இந்த திமுகவினருக்கு தமிழகத்தில் இனி இடம் ஏது?


உண்மையான திராவிட சிந்தனை கொண்ட ஒரு அரசாக இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? மக்கள் நலனில் கொஞ்சமாவது அக்கறையோடு செயல்பட்டு இருக்கவேண்டும். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சியைப் பார்த்தாவது கற்றுக் கொண்டு இருக்க வேண்டாமா? தமிழகத்தில் இதுவரை எந்த ஆட்சியிலும் இதுபோன்ற ஒரு அவச்சொல் திராவிடர்களான நமக்கு வந்தது இல்லை.


மக்கள் விரோத நடவடிக்கைகள்:


இதுபோன்ற மக்கள் விரோத நடவடிக்கைகள் தான் இன்றைய திமுக அரசின் இரண்டு ஆண்டுகால ஆட்சியின் சாதனையாக பார்க்க முடிகிறது. இனியாவது திராவிட மாடல் என்று பெயரளவுக்கு சொல்லி வருவதை நிறுத்திக் கொண்டு, மக்கள் நலனில் அக்கறை காட்டுங்கள். திராவிட கொள்கைகளை அழித்து விடாதீர்கள் ஏழை எளிய சாமானிய மக்களின் வாழ்க்கைத்தரம் உயர பாடுபடுங்கள். பெண்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுங்கள். விவசாயத்தை அழித்து விடாமல் காப்பாற்றுங்கள் என்று திமுக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று சசிகலா  வலியுறுத்தியுள்ளார்.