சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா “நான் எல்லோருக்கும் பொதுவான தலைவர், அதிமுகவில்  நான் சாதியை பார்க்கவில்லை. சாதியை பார்த்திருந்தால் கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை முதலமைச்சர் ஆக்கியிருப்பேனா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.


செய்தியாளர் சந்திப்பு:


அம்பேத்கர் பிறந்தநாள் விழாவையொட்டி தியாகராய நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ”ஓ.பன்னீர் செல்வம் சந்திக்க நேரம் கேட்டால் நிச்சயம் வழங்குவேன். மாநாட்டிற்கு அழைத்தால் அது குறித்து பிறகு முடிவெடுக்கப்படும். எல்லோருக்கும் புரிந்து கொள்ள ஒரு காலம் வரும். அந்த கால நேரம் வரும் போது எல்லோரும் புரிந்து கொள்வார்கள்.


”தொண்டர்களிடம் கேளுங்கள்”


நீங்கள் பன்னீர்செல்வத்தை மட்டும் சொல்கிறீர்கள் . நான் பொதுவான கருத்தை சொல்கிறேன். அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நான் நீக்கப்பட்டது குறித்து சிவில் கோர்ட்டின் முடிவு தெரியாமல் எந்த முடிவும் நிரந்தரம் இல்லை என்று உச்ச நீதிமன்றமே சொல்லியிருக்கிறது. அதிமுகவில் குறிப்பிட்ட 3 பேரை தவிர யார் வேண்டும் என்றாலும் இணையலாம் என்று சொல்கிறார்கள். இது குறித்து தொண்டர்களிடம் தான் கேட்க வேண்டும்.


”சாதி பார்த்தது கிடையாது”


ஏனென்றால் நான் எல்லாருக்கும் பொதுவான நபர். எனக்கு இது சொந்த ஊர், அது சொந்த ஊர் என்று நினைத்தது கிடையாது. ஜாதியிலும் அப்படி நினைத்தது கிடையாது. அப்படி நினைத்தால் கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை நான் முதலமைச்சராக கொண்டு வந்து இருக்க மாட்டேன். என்னுடைய வழி தனி வழியாகவே இருக்கும். நான் ஆரம்பத்தில் இருந்தே அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றுதான் கூறி வருகிறேன்.


”ஜெயலலிதா வழியில் நானும்”


திமுகவில் இருந்து எம்.ஜி.ஆரை வெளியேற்றிய பிறகு உருவானதுதான் அதிமுக. இந்த கட்சி ஆரம்பித்த பிறகு மக்கள் எப்படி பயன்பெற்றார்கள் என்று தான் பார்க்க வேண்டும். அதன் தொடர்ச்சியாக ஜெயலலிதாவும் அதை செய்து வந்தார். அதன் பிறகு நானும் அதே முயற்சியில் இருக்கிறேன். அதிமுகவை அரசியல் கட்சி என்பதையும் தாண்டி நான் நினைப்பேன். தமிழ்நாட்டிற்கு ஒரு நல்லதை செய்ய வேண்டும் என்றால் அதிமுக இருந்தே ஆக வேண்டும். இல்லையென்றால் தப்பானவர்களுக்கு ஓட்டு போட்டு அவர்கள் தனியாக ஒரு பாதையில் செயல்பட்டு கொண்டு இருப்பார்கள்.


”திமுக இரட்டை வேடம் போடுகிறது”


அதிமுக உள்கட்சி பூசல் என்பதை திமுக எப்படி பயன்படுத்திறது என்பதைத்தான் பார்க்க வேண்டும். அதிமுகவில் அனைவரும் ஒன்று சேரக்கூடது என திமுக செயல்பட்டு வருகிறது. திமுக சட்டசபையிலே இரட்டை வேடம் போடுகிறது. கோடநாடு வழக்கை அரசியலுக்காக திமுக பயன்படுத்தி வருகிறது. கோடநாடு வழக்கு இப்போதைக்கு முடியாது. அதிமுகவில் இருந்து விலகிய அனைவரையும் நான் ஒருங்கிணைப்பேன்" என சசிகலா பேசியுள்ளார்.