திமுக சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் பணிப்பெண் சித்ரவதை விவகாரத்தில் பெண்களை யார் துன்புறுத்தினாலும் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் தான். அதற்கு மாற்று கருத்தே கிடையாது என கடலூரில் சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரத்குமார் பேட்டியளித்தார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் வாண்டையார் இல்ல திருமண விழா நடைபெறுகிறது. இதற்காக நேற்று முன்தினம் சென்னையில் இருந்து சிதம்பரம் செல்லும் வழியில் கடலூர் நகர அரங்கம் அருகே அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் கடலூர் மாவட்ட செயலாளர் ஆனந்தராஜ் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கடலூர் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் முத்துக்குமரன், மாவட்ட அமைப்பாளர் குமாரசாமி, சர்க்கரை கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் கூறுகையில், நடிகர் சங்க கட்டிடத்திற்கு மறைந்த நடிகர் விஜயகாந்த் பெயர் சூட்டுவதற்கு பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டு வரட்டும், அதன் பிறகு எங்கள் முடிவை அறிவிப்பதாகவும் கூறினார்.
பல்லாவரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் வேலைக்கு சென்ற இளம்பெண்ணை சித்ரவதை செய்த விவகாரம் தொடர்பான அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கண்டனத்தையும் கருத்தையும் தெரிவித்து வருகின்ற நிலையில் இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த சரத்குமார், எந்த வீட்டில் பெண்கள் யாரை சித்திரவதை செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம்தான், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தே கிடையாது என தெரிவித்தார்.
அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்காக மத்திய அரசு அலுவலகங்கள் விடுமுறை தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், ராமர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு கோவிலாக கட்டப்பட்டுள்ளதால் அதனை மக்கள் அனைவரும் அதன் கோவிலின் தொழில்நுட்பங்களை பார்க்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசானது விடுமுறை அளித்துள்ளது. அதில் ஒன்றும் தவறு இருப்பதாக தெரியவில்லை என்று கூறினார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வரும் நிலையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியும் தயாராகி வருகிறது. வருகின்ற பிப்ரவரி இரண்டாம் தேதி கட்சியின் முன்னணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை அழைத்துப் பேச உள்ளதாகவும், அதன் பிறகு நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.