இந்தி மொழியை காட்டிலும் தமிழ் தான் பழமையானது என, தமிழ்நாடு ஆளுநர் ரவி பேசியுள்ளார். பனாரஸ் பல்கலைக்கழக மாணவர்கள் உடனான உரையாடலின் போது, சமஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான பழமை வாய்ந்த மொழி எனவும் பேசியுள்ளார்.


ஆளுநர் - அரசு மோதல்


தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என். ரவி பொறுப்பேற்றது முதலே அவருக்கும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் ஏழாம் பொருத்தமாக தான் உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் பல மசோதாக்களுக்கு அவர் ஒப்புதல் அளிக்காமலயே கிடப்பில் போடுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதுதொடர்பாக பேசிய ஆளுநர், மசோதாக்களை நிறுத்திவைத்தால், அவை நிராகரிக்கப்பட்டதாக அர்த்தம் என்று கூறிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.தொடர்ந்து, மசோதக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர்களுக்கு கால நிர்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து,. ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதாவிற்கு உடனடியாக ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.


ஆளுநர் சர்ச்சை பேச்சுகள்:


அரசுடன் மோதல் மட்டுமின்றி பல்வேறு சர்ச்சை கருத்துகளையும் தெரிவித்து வருகிறார். உதாரணமாக, இந்த மநிலத்தை தமிழ்நாடு’ என்று அழைப்பதைவிட தமிழகம் என்ற பெயரே பொருத்தமாக இருக்கும். ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் வருத்தமானதுதான். ஆனால், வெளிநாட்டின் நிதியை பயன்படுத்தி மக்களை போராட்டம் செய்ய தூண்டிவிட்டு ஆலையை மூடிவிட்டனர். நாட்டின் மொத்த காப்பர் உற்பத்தியில் 40 சதவீதம் ஸ்டெர்லைட் ஆலை பூர்த்தி செய்து வந்தது” என்பது போன்ற ஆளுநரின் கருத்துகள் சர்ச்சையை கிளப்பின. அந்த வரிசையில் ஆளுநர் தெரிவித்துள்ள புதிய கருத்து ஒன்றும் சர்சசைக்குள்ளாகியுள்ளது.


இந்தியை விட தமிழ் பழமையானது - ரவி:


ஆளுநரின் அழைப்பின் பேரில்,  பனாரஸ் பல்கலைக்கழகத்தில் இருந்து  18 மாணவர்கள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் கொண்ட குழு தமிழகத்திற்கு வருகை தந்துள்ளது. தமிழ்நாடு தர்ஷன் என்ற பெயரில் கடந்த 4ம் தேதி தேதி முதல் நேற்று வரை சுற்றுப்பயணத்தில் ஈடுபட்ட அந்த மாணவர்கள் உடன், சென்னை கிண்டியில் ராஜ்பவனில் மாணவர்களுடன் ஆளுநர் ரவி இன்று கலந்துரையாடினார்.  


அப்போது இந்தி திணிப்பு தொடர்பாக பேசிய ஆளுநர் ”இந்தி மொழியை விட தமிழகம் மிகவும் பழமையான மொழி. தமிழ்மொழி  மீது இந்தி உட்பட  எந்த மொழியையும் திணிக்க முடியாது.  சமஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான பழமை வாய்ந்த மொழி என குறிப்பிட்டுள்ளார்.


மொழி வரலாறு:


2,000 ஆண்டுகளுக்கும் மேலான பதிவு செய்யப்பட்ட வரலாற்றைக் கொண்டு, உலகில் வாழும் மிகப் பழமையான மொழிகளில் தமிழ் ஒன்றாகும். சமஸ்கிருதமோ 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய பதிவுசெய்யப்பட்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. இரண்டும் நீண்ட காலமாக வளர்ச்சியடைந்துள்ளதால், எந்த மொழி பழமையானது என்பதைக் கண்டறிவது கடினம். இருப்பினும், வாழும் மொழிகளில் தமிழ் மிகவும் பழமையான எழுத்து மரபுகளில் ஒன்றாகும் என்பது பொதுவாக ஒப்புக் கொள்ளப்படுகிறது,