சனாதான விவகாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், திமுக இதுதொடர்பாக பதிலளித்துள்ளது.


உச்சநீதிமன்றம் உத்தரவு:


சனாதனத்திற்கு எதிராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது, அவருக்கு எதிராக வழக்குப்பதிய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் அனிருதா போஸ், பேலா எம். திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.  அப்போது, சனாதன ஒழிப்பு மாநாடு தொடர்பாக தமிழ்நாடு அரசு, அமைச்சர்கள் உதயநிதி மற்றும் சேகர் பாபு ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.


அதோடு, எம்.பி. ஆ. ராசா, எம்.பி., திருமாவளவன், எம்.பி., சு.வெங்கடேசன், தமிழ்நாடு டிஜிபி,  சென்னை மாநகர காவல் ஆணையர், மத்திய உள்துறை அமைச்சகம்,  தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோருக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், மனுதாரர் ஏன் உயர்நீதிமன்றத்தை நாடக்கூடாது, நீங்கள் எங்களை காவல்நிலையமாக மாற்றுவதாகவும் ” நிதிபதிகள் கூறினர்.


திமுக சொல்வது என்ன?


உச்சநீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியது தொடர்பாக பேசியுள்ள திமுக மூத்த தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன், “மனு தாக்கல் செய்யப்பட்டு, விளக்கம் கேட்டு உள்ளனர். விளக்கம் போகட்டும். இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது, அவர்களிடம் (மத்திய அரசு) விளக்கம் கேட்போம். 'சனாதன தர்மம்' என்றால் என்ன, அது நாகரீக சமுதாயத்தில் சமத்துவத்தைப் பற்றி பேசுகிறதா அல்லது பழைய காட்டுமிராண்டித்தனமான முறையைப் பற்றி பேசுகிறதா? அவர்கள் விளக்கட்டும். நாங்கள் நீதிமன்றத்திற்கு பதிலளிப்போம்." என பேசியுள்ளார்.


பிரச்னை என்ன?


சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி, ““ சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம் ஆகும். சமத்துவத்திற்கும், சமூக நீதிக்கும் எதிராக சனாதனம் இருக்கிறது, அதனை ஒழிக்க வேண்டும்” என பேசியிருந்தார். அமைச்சர் உதயநிதியின் இந்த கருத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் எழுந்தன.


அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு சனாதன தர்மத்தை பின்பற்றுவோர் மனதை புண்படுத்துவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு முன்னாள் நீதிபதிகள் உட்பட 262 பேர் கையெழுத்திட்ட புகார் கடிதம் அனுப்பினர். இதைத்தொடர்ந்து, பாஜகவை சேர்ந்த பல தலைவர்களும் உதயநிதிக்கு கடும் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். டெல்லி, பீகாரில் அமைச்சர் உதயநிதிக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டுள்ளது. அயோத்தி சாமியார் என்பவர் அமைச்சர் உதயநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இந்நிலையில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு தொடர்பான விசாரணையில் தான், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.