TN Samsung: ரூ.1000 கோடியை அள்ளிய தமிழ்நாடு - முதலீடு எங்கே தெரியுமா? குவியப்போகும் வேலைவாய்ப்புகள்..!
TN Samsung: தமிழ்நாட்டில் மேலும் ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய சாம்சங் நிறுவனம் உறுதி அளித்துள்ளதாக, அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.

TN Samsung: அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வரி விதிப்பு நடவடிக்கையால் தமிழ்நாட்டிற்கு ஜாக்பாட் அடித்துள்ளது.
இந்தியாவில் உற்பத்தி:
ஆப்பிள் நிறுவனத்தை தொடர்ந்து, தென்கொரியாவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங்கும், தனது உற்பத்தி பிரிவை இந்தியாவிற்கு மாற்ற திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள தகவல்களின்படி, அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைகளால், தற்போது வியட்நாமில் உற்பத்தி செய்து வரும் ஸ்மார்ட் ஃபோன் உள்ளிட்ட மின்சாதன பொருட்களின் உற்பத்தியை இந்தியாவிற்கு மாற்ற சாம்சங் முடிவு செய்துள்ளது. வியாட்நாமில் பிக்செல் ஸ்மார்ட் போன் உற்பத்தி பணிகளை மேற்கொண்டு வரும் ஆல்ஃபாபெட் நிறுவனமும் தங்களது உற்பத்தியை இந்தியாவிற்கு மாற்ற பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளது.
வணிக சங்கிலி:
வியட்நாம் சாம்சங்கின் முக்கிய உற்பத்தி மையமாக செயல்படுகிறது. 2024 நிதியாண்டில் $52 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள மொபைல் போன்கள் மற்றும் உதிரி பாகங்களை அங்கிருந்து ஏற்றுமதி செய்துள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த வர்த்தகத்தில் இது 9 சதவீதத்தைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக, கடந்த ஆண்டு வியட்நாமின் மின்னணு ஏற்றுமதி $142 பில்லியனைத் தொட்டது. இது இந்தியா 2024 நிதியாண்டில் அடைய முடிந்த $29.2 பில்லியனை விட கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகம். இந்நிலையில் தான், சாம்சங் நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய உறுதி அளித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
காரணம் என்ன?
வியட்நாமில் இருந்து ஏற்றுமதி செய்யும் மின்சாதன பொருட்களுக்கு அமெரிக்கா 46% வரி விதித்துள்ளது. அதேநேரம், இந்தியாவுக்கு 26% வரி மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரிச்சுமையை தவிர்க்கும் நோக்கிலேயே, வியாட்நாமில் உள்ள பல உற்பத்தி நிறுவனங்கள் தங்களது ஆலைகளை இந்தியாவிற்கு மாற்ற தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே அடிடாஸ் உள்ளிட்ட பிரபல காலணி நிறுவனங்களும், தங்களது உற்பத்தியை இந்தியாவிற்கு குறிப்பாக தமிழ்நாட்டிற்கு மாற்ற முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் ரூ.1000 கோடி முதலீடு
சட்டப்பேரவையில் பேசிய தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, “தமிழ்நாட்டில் மேலும் ஆயிரம் கோடி ரூபாயை சாம்சங் நிறுவனம் முதலீடு செய்ய உள்ளது. தற்போதுள்ள தொழிலாளர்கள் மீது நம்பிக்கை வைத்து முதலீடு செய்வதாக அந்நிறுவனம் உறுதி அளித்துள்ளது” என தெரிவித்துள்ளார். இதன் மூலம் புதியதாக ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தமிழ்நாட்டின் உற்பத்தி திறன் மற்றும் பொருளாதார சூழலும் மேம்படும் என நம்பப்படுகிறது.
சாம்சங் உற்பத்தி ஆலை:
தமிழ்நாட்டில் ஏற்கனவே சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் உற்பத்தி ஆலை உள்ளது. கடந்த 2007ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த ஆலையில் ஆயிரத்து 800 முதல் 2000 பேர் வரை பணியாற்றுகின்றனர். அதில் குளிர்சாதன பெட்டி, தொலைக்காட்சி, வாஷிங் மெஷின், ஏசி ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது. தொடர்ந்து கடந்த 2022ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரிலேயே ஆயிரத்து 588 கோடி ரூபாய் செலவில் 22 ஏக்கர் பரப்பளவில் கம்ப்ரஸர் உற்பத்தி ஆலையை சாம்சங் நிறுவனம் அமைத்தது. அதன் மூலம் ஆண்டுக்கு 600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியாவில் இருந்து ஆண்டுக்கு சாம்சங் நிறுவனத்திற்கு 12 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாய் கிடைக்கிறது. அதில் சென்னை தொழிற்சாலைகளில் இருந்து மட்டுமே 20 முதல் 30 சதவிகித வருவாய் ஈட்டப்படுகிறது. அந்த தொழிற்சாலையை மேலும் விரிவுபடுத்தும் வகையில் தான், சாம்சங் நிறுவனம் கூடுதலாக ஆயிரம் கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





















