தமிழ்நாட்டில் சம்பா நெற்பயிர்களுக்கு காப்பீடு பெறுவதற்கான காலக்கெடு நாளை மறுநாளுடன் முடிவடையவுள்ள நிலையில் 48% பயிர்களுக்கு மட்டுமே இதுவரை காப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் சம்பா நெற்பயிர் காப்பீட்டுக்கான காலக்கெடுவை குறைந்தது ஒரு மாதத்திற்கு நீட்டிக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Continues below advertisement

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்., 

தமிழ்நாட்டில் சம்பா நெற்பயிர்களுக்கு காப்பீடு பெறுவதற்கான காலக்கெடு நாளை மறுநாளுடன் முடிவடையவுள்ள நிலையில், காவிரி பாசன மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டு வரும் பயிர்களில் இதுவரை வெறும் 48% மட்டுமே காப்பீடு செய்யப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில் காலக்கெடு நீட்டிக்கப்படவில்லை என்றால், சம்பா பயிர்களை காப்பீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விடும்.

Continues below advertisement

காவிரி பாசன மாவட்டங்களில் இதுவரை மொத்தம் 8 லட்சத்து 69,571 ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. மேலும் பல லட்சம் ஏக்கரில் சம்பா நடவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை நடவு செய்யப்பட்ட பயிர்களில் 4 லட்சத்து 16,241 ஏக்கர் பயிர்கள் மட்டுமே காப்பீடு செய்யப்பட்டுள்ளன. நடைமுறை சிக்கல்கள் காரணமாக மீதமுள்ள பயிர்களுக்கு இன்னும் காப்பீடு பெற முடியவில்லை.

 

சம்பா, தாளடி பருவத்தில் நெற்பயிர்களை காப்பீடு செய்ய ஏக்கருக்கு 564 ரூபாயை உழவர்கள் பிரீமியமாக செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தினால் இயற்கைச் சீற்றங்களால் பயிர்கள் சேதமடையும் பட்சத்தில், விதிகளுக்கு உட்பட்டு ஏக்கருக்கு ரூ.37,600 வரை காப்பீடாக வழங்கப்படும். நவம்பர் 15-ஆம் தேதிக்குள் காப்பீட்டு பிரிமியம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் பாதி அளவு கூட காப்பீடு செய்யப்படவில்லை.

 

கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப்பணிகளில் ஈடுபட்டிருப்பதால், அவர்களிடமிருந்து சாகுபடி சான்றிதழ் பெற முடியாத நிலைக்கு உழவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதனால் தான் பெரும்பாலான பகுதிகளில் உழவர்களால் பயிர்க்காப்பீடு செய்ய முடியவில்லை என்று கூறப்படுகிறது.

உழவர்களால் பயிர்க்காப்பீடு செய்ய முடியாததற்கு அவர்கள் காரணமல்ல.... மாறாக, அரசு எந்திரம் தான் காரணம். எனவே, உழவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு சம்பா நெற்பயிர்களை காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை நவம்பர் 15-ஆம் தேதியிலிருந்து மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவர் அவர் தெரிவித்துள்ளார்.