சேலம் மாவட்டம் ஓமலூர்  அடுத்துள்ள தீவட்டிப்பட்டி கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் மாரியம்மன் கோயில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த திருவிழாவை ஒரு தரப்பினர் மட்டுமே எடுத்து நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்களை மாரியம்மன் கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை என புகார் விழுந்தது. இந்த ஆண்டு நாங்களும் கோவில் திருவிழாவை எடுத்து நடத்துவோம் என பட்டியலின மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் இரண்டு தரப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதால் மாரியம்மன் கோவில் திருவிழா நிறுத்தப்பட்டது. 



இந்த நிலையில் இரண்டு தரப்பினர் இடையே பேச்சு வார்த்தை நடத்துவதற்காக வட்டாட்சியர் தலைமையில் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. சமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு திட்டப்படாத நிலையில் இரண்டு தரப்பினர் இடையே அதிகாரிகள் முன்னிலையிலேயே மோதல் ஏற்பட்டுள்ளது. இரண்டு தரப்பினரும் அதிகாரிகள் முன்னிலையில் கற்களை கொண்டு தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த மோதல் முற்றிய நிலையில் சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பேக்கரி, டீக்கடை என 15 கடைகளுக்கும் மேல் இரண்டு தரப்பினரும் கற்களை வீசி மோதலில் ஈடுபட்டனர். மேலும் அங்கிருந்த ஒரு கடைக்கு தீ வைத்து எரிக்கப்பட்டது. கற்களை வீசியவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தீவட்டிப்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உள்ளனர். 


இந்த நிலையில் தீவட்டிப்பட்டி பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட கலவரத்தில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும் ஆதிதிராவிட மக்களின் வழிபாட்டு உரிமையை மீட்டெடுக்கவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார், துணை பொது செயலாளர் வன்னியரசு, சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.



இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ரவிக்குமார், "தீவட்டிபட்டியில் உள்ள இந்து சமய அறநிலைக்கு சொந்தமான மாரியம்மன் கோவிலில் ஆதிதிராவிட மக்கள் வழிபடக்கூடாது என்று தடுத்து வன்முறை ஏவப்பட்டு உள்ளது. இதில் காவல்துறையும் சட்டப்படி நடந்து கொள்ளாதது மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ள அப்பாவி ஆதிதிராவிட மக்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்து சமய அறநிலைத்துறை சொந்தமான தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவிலுக்கு ஆதிதிராவிடர் பெண் ஒருவரை அறங்காவலர் குழு உறுப்பினராக நியமனம் செய்ய வேண்டும், சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட 1563 அறநிலையத்துறைக்கு சொந்தமான திருக்கோவில்களில் பெரும்பாலும் அறங்காவலர்கள் நியமிக்கப்படாத நிலை உள்ளது. அவற்றையும் நியமித்து கோவில் நிர்வாகத்தை இந்து சமய அறநிலை துறை சட்டப்படி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து கோயில்களிலும் இந்து சமய அறநிலைத்துறைக்கு உட்பட்ட கோவில் என பெயர் பலகை வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் இந்த கோவில்கள் அனைத்தும் அரசு கட்டுப்பாட்டில் இருப்பதற்கு உதவும் இல்லை என்றால் அரசு கட்டுப்பாட்டில் இருந்து பிடுங்கி தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிற வலதுசாரி சக்திகளின் கை ஓங்குவதற்கு தமிழ்நாடு அரசு இடம் கொடுக்கக் கூடாது என தமிழ்நாடு முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.