தமிழ்நாட்டில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டு வரும் சேலம்,கரூர்,திண்டுக்கல் 159 கி.மீ. இரட்டை ரயில் பாதை திட்டத்தை (Salem Karur Dindigul railway doubling) ரூ.2,241.67 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி ரூ.10,021 கோடி மதிப்பிலான 5 ரயில்வே திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தது.
இதில் தமிழகத்தில் அரக்கோணம்- ரேணிகுண்டா இடையே 77 கி.மீ. தொலைவுக்கு 3 மற்றும் 4-வது ரயில் பாதைகள், ஓசூர்-ஓமலூர் இடையே 147 கி.மீ. இரட்டைப் பாதை, சேலம்-கரூர்-திண்டுக்கல் இடையே 159 கி.மீ. இரட்டைப் பாதை ஆகிய மூன்று திட்டங்கள் இடம்பெற்றிருந்தன.இதன் தொடர்ச்சியாக சேலம்-கரூர்-திண்டுக்கல் இரட்டைப் பாதை திட்டத்தை ரூ.2,241.67 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்ற ரயில்வே வாரியம் தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்தில் கட்டுமானப் பணிகளுக்கு ரூ.1,580.33 கோடி,,சிக்னல் மற்றும் தொலைத்தொடர்புப் பணிகளுக்கு ரூ.281.78 கோடி, ரயில் மின்மயமாக்கல் உள்ளிட்ட மின்சாரப் பணிகளுக்கு ரூ.379.56 கோடி என செலவு மதிப்பிடப்பட்டுள்ளது.
சேலத்தில் இருந்து நாமக்கல், கரூர் வழியாக திண்டுக்கல் செல்லும் தற்போதைய ரயில் வழித்தடத்தை இரட்டைப் பாதையாக மாற்றுவதுதான் இந்தத் திட்டம். இது சேலம்-திண்டுக்கல் இடையே புதிதாக வேறு வழித்தடத்தில் அமைக்கப்படும் ரயில் பாதை அல்ல. தற்போது சேலம்-கரூர்-திண்டுக்கல் இடையே பயன்பாட்டில் உள்ள ரயில் பாதைக்கு இணையாக மேலும் ஒரு ரயில் பாதை அமைக்கப்பட்டு, இரட்டைப் பாதையாக மாற்றப்பட உள்ளது. இந்த 159 கி.மீ. பகுதி இரட்டைப் பாதையாக மாறுவது தமிழக ரயில் போக்குவரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. பெங்களூரு முதல் தென் தமிழகம் வரை தற்போது ஓமலூர்-சேலம் இடையே இரட்டை ரயில் பாதை உள்ளது. ஆனால் சேலத்தில் இருந்து கரூர் வழியாக திண்டுக்கல் வரை ஒற்றை ரயில் பாதை மட்டுமே உள்ளது.
இதனால் எதிரெதிர் திசைகளில் வரும் ரயில்கள் குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் ஒன்றுக்கொன்று வழிவிடுவதற்காகக் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. சேலம்-கரூர்-திண்டுக்கல் வழித்தடம் இரட்டைப் பாதையாக மாறும்போது, இரு திசைகளிலும் தனித்தனி பாதைகளில் ரயில்களை இயக்க முடியும். இதனால் ரயில்கள் வழிவிடுவதற்காகக் காத்திருக்கும் நேரத்தைக் குறைப்பதுடன், இந்த வழித்தடத்தின் ரயில் போக்குவரத்துத் திறனையும் அதிகரிக்க முடியும்.
திண்டுக்கலுக்குத் தெற்கே மதுரை-திருநெல்வேலி வரையிலான வழித்தடம் ஏற்கெனவே இரட்டை பாதையாக உள்ளது. இதற்கிடையே ஓசூர்-தருமபுரி-ஓமலூர் இடையேயான 147 கி.மீ. பாதையை இரட்டிப்பாக்கும் திட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.ஓசூர்-ஓமலூர் மற்றும் சேலம்-கரூர்-திண்டுக்கல் ஆகிய இரண்டு இரட்டைப் பாதை திட்டங்களும் நிறைவடைந்தால், பெங்களூருவில் இருந்து தென் தமிழகத்தை நோக்கிய ரயில் போக்குவரத்துத் திறன் அதிகரிக்கும்.
அதாவது, பெங்களூரு – ஓசூர் – தருமபுரி – சேலம் – ராசிபுரம் – நாமக்கல் – கரூர் – திண்டுக்கல் – மதுரை – விருதுநகர் – சாத்தூர் – கோவில்பட்டி – திருநெல்வேலி – வள்ளியூர் – நாகர்கோவில் என நீளும் இந்த முக்கிய வழித்தடத்தில் கூடுதல் பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களை இயக்குவதற்கான வாய்ப்பு உருவாகும். 159 கி.மீ. தொலைவுக்கு மற்றொரு தண்டவாளத்தை அமைப்பதுடன் இந்தத் திட்டம் முடிந்துவிடுவதில்லை. திட்டத்தின் ஒரு பகுதியாக 18 பெரிய பாலங்கள் மற்றும் 241 சிறிய பாலங்கள் தொடர்பான பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கட்டுமானப் பணிகள், சிக்னல் மற்றும் தொலைத்தொடர்புப் பணிகள், மின்சாரப் பணிகள் மற்றும் ரயில் மின்மயமாக்கல் தொடர்பான பணிகளும் இந்தத் திட்டத்தில் இடம்பெறுகின்றன. சேலம்-கரூர்-திண்டுக்கல் வழித்தடம் பயணிகள் ரயில் போக்குவரத்துக்கு மட்டுமின்றி சரக்கு ரயில் போக்குவரத்திலும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த வழித்தடப் பகுதிகளுக்கான சரக்குப் போக்குவரத்துத் திறனை அதிகரிப்பதற்கும் இரட்டை ரயில் பாதை பயன்படும். சேலம்-கரூர்-திண்டுக்கல் இரட்டைப் பாதை திட்டத்துக்கான ஆய்வுகள் பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டன. 2020-21 காலகட்டத்திலேயே ரயில்வே திட்டப் பட்டியலில் இந்தத் திட்டம் இடம்பெற்றிருந்தது. அப்போது திட்டத்தின் மதிப்பீடு சுமார் ரூ.1,600 கோடியாக இருந்தது.
ஆனால் திட்டம் உடனடியாக கட்டுமானப் பணிகளுக்குச் செல்லவில்லை. ஆரம்பகட்டங்களில் குறைந்த அளவிலான நிதியே ஒதுக்கப்பட்டு, பாதை ஆய்வு மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. 2024 பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட பதிலிலும், சேலம்–கரூர்-திண்டுக்கல் இரட்டைப் பாதைக்கான ஆய்வு முடிக்கப்பட்டு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்திருந்தது. அதன்பின்னர் இறுதிக்கட்ட வழித்தட ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, விரிவான திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டது. இவ்வாறு பல ஆண்டுகளாக ஆய்வு மற்றும் திட்டமிடல் நிலையிலேயே இருந்து வந்த இந்தத் திட்டத்துக்கு கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது ரூ.2,241.67 கோடி மதிப்பீட்டில் திட்டத்தை நிறைவேற்ற ரயில்வே வாரியமும் ஒப்புதல் வழங்கியுள்ளது.