சேலம் மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் கன மழை பெய்து வருகிறது . சேலம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மொத்தமாக 702.10 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பகுதியில் 86.4 மி.மீ மழையும், வீரகனூர் பகுதியில் 67 மி.மீ மழையும், கெங்கவல்லி பகுதியில் 56.2 மி.மீ மழையும், ஆத்தூர் பகுதியில் 52 மி.மீ மழையும், பி.என் பட்டி பகுதியில் 50.9 மி.மீ மழையும், தலைவாசல் பகுதியில் 49 மி.மீ மழையும், காரிய கோவில் பகுதியில் 48 மி.மீ மழையும், சங்ககிரி பகுதியில் 47 மி.மீ மழையும், எடப்பாடி பகுதியில் 42.6 மி.மீ மழையும், ஏற்காடு பகுதியில் 42 மி.மீ மழையும், ஓமலூர் பகுதியில் 40 மி.மீ மழையும், ஆனைமடுவு பகுதியில் 37 மி.மீ மழையும், சேலம் மாநகர் பகுதியில் 32.2 மி.மீ மழையும், காடையாம்பட்டி பகுதியில் 28 மி.மீ மழையும் மற்றும் சேலம் மாவட்டத்தில் குறைந்தபட்சமாக மேட்டூரில் 23.8 மி.மீ மழை பதிவாகியுள்ளது.



சேலம் மாவட்டத்தில் உள்ளது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார். மேலும் கன மழைக்கு வாய்ப்புள்ளதால் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கேட்டுக் கொண்டுள்ளார்.


கடந்த சில நாட்களாக சேலம் மாவட்டம் ஆத்தூர், ஓமலூர், எடப்பாடி, மேட்டூர், சங்ககிரி உள்ளிட்ட பகுதிகளில் லேசான மற்றும் மிதமான மழை பெய்து வந்தது. இருப்பினும் சேலம் மாநகர் பகுதியில் மழை பெய்யவில்லை. நேற்று முன்தினம் காலை முதல் சேலம் மாநகர் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் சேலம் மாநகர பகுதிகளான அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், நான்கு ரோடு, 5 ரோடு, கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.


இதனால் சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலையில் மழை நீர் தேங்கியுள்ளது. இன்றும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக மாணவர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 



இதேபோன்று தமிழகத்தில் கன மழை எதிரொலியாக சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, தஞ்சை, கோவை, நீலகிரி, அரியலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, சேலம், திருச்சி, தர்மபுரி, கரூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (12.11.2022) ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.