பழனி கோயில் நிலம் முறைகேடு

பழனி அடிவாரத்தில் உள்ள சுமார் 1 ஏக்கர் 40 சென்ட் நிலம், கோயிலின் கட்டுப்பாட்டில் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்துக்கு சொந்தமானது. சுமார்  100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை 2 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலம், கோயிலின் அனுமதி மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி, தனியார் பெயருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

Continues below advertisement

அந்த வகையில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உறவினர் இந்த நிலத்தை வாங்கியதாக தகவல் வெளியானது. ஆனால் இதனை கடுமையாக மறுத்த அமைச்சர் ரமேஷ் தன் மீது பொய்யான தகவலை பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். 

100 கோடி நிலம் 2 கோடிக்கு விற்பனை

பழனி கோயில் நிலத்தை முறைகேடாக பதிவு செய்ததில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியான நிலையில்,  மதுரை உயர்நீதிமன்றம் சர்ச்சைக்குரிய பத்திரப்பதிவை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனையடுத்து வழக்கின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு விசாரணையை சிபிசிஐடிக்கு (CBCID) மாற்றிய நிலையில், தற்போது சிபிசிஐடி எஸ்.பி. தலைமையில் அதிகாரிகள், கோயில் நிர்வாகத்தினர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடைபெற்று  வருகிறது.

Continues below advertisement

இந்த நிலையில், பழனி கோயில் பத்திரம் நகல் வெளியாகியுள்ளது. அதில், ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தில் தண்டபாணி மடம் தனியார் அறக்கட்டளை என குறிப்பிடப்பட்டுள்ளது. தண்டபாணி மடத்திற்கு சொந்தமான நிலங்கள் மூலம் வருவாய் ஈட்டி தர்மகாரியங்கள் செய்வது வழக்கம் என பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பத்திரத்தில் வெளியான ஷாக் தகவல்கள்

ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் மூலம் எதிர்பார்த்த வருவாய் கிடைக்காத காரணத்தினால் விற்பனை செய்யப்படுவதாகவும் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ரூ.100 கோடி நிலத்தை ரூ.2 கோடிக்கு கேட்டுள்ளதே அதிக விலை எனவும் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிலத்தை வாங்குவதற்கு 2 கோடிக்கான பணமானது 50 லட்சம் ரூபாய் என 4 காசோலைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 27ம் தேதி கையெழுத்தான விற்பனை பத்திரம் ஜூன் 6ம் தேதி பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.