இந்தியாவின் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்று சபரிமலை ஐயப்பன் கோயில். கேரளாவில் உள்ள இந்த கோயிலுக்கு ஆண்டுதோறும் மகர விளக்கு பூஜை மற்றும் மண்டல பூஜையில் பங்கேற்க லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கம். கேரளாவில் இருந்து மட்டுமின்றி தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும், வட இந்தியாவில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஐயப்ப தரிசனத்திற்கு குவிவது வழக்கம்.

சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்:


தமிழ்நாட்டில் இருந்து மட்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்குச் செல்வது வழக்கம். பக்தர்களின் வசதிக்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். நடப்பாண்டில் சபரிமலையில் நடைபெறும் மகர விளக்கு மற்றும் மண்டல விளக்கு பூஜைக்காக வரும் 15ம் தேதி ( 15.11.2024) சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.


சபரிமலைக்கான இந்த சிறுப்பு பேருந்துகள் சென்னை, திருச்சி, மதுரை, புதுச்சேரி மற்றும் கடலூர் ஆகிய நகரங்களில் இருந்து இயக்கப்பட உள்ளது. சென்னையில் இருந்து மட்டும் கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் ஆகிய இரு இடங்களில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. நேரடியாக பம்பைக்கே இயக்கப்படும் இந்த பேருந்துகள் படுக்கை வசதியுடனும், இருக்கை வசதியுடனும், ஏசி வசதியுடனும் இயக்கப்பட உள்ளது.

அரசுப்பேருந்தை வாடகைக்கு எடுப்பது எப்படி?


சபரிமலை கோயில் வரும் டிசம்பர் மாதம் 27ம் தேதி முதல் டிசம்பர் 30ம் தேதி வரை நடை சாத்தப்பட்டிருக்கும். இதனால், வரும் டிசம்பர் 26ம் தேதி முதல் டிசம்பர் 29ம் தேதி வரை இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாது. நடப்பாண்டில் கடந்தாண்டுகளை விட அதிகளவு பக்தர்கள் சபரிமலைக்குச் பக்தர்கள் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பயணிகள் குழுவாக அரசு பேருந்துகளை வாடகைக்கு எடுத்துச் செல்லவும் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 60 பேருந்துகள் இயக்கப்பட உள்ள நிலையில், ஐயப்ப பக்தர்கள் பேருந்துகளை வாடகைக்கு எடுக்க 9445014452, 9445014424 மற்றும் 9445014463 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். மேலும், பேருந்துகளில் இருக்கைகளை முன்பதிவு செய்ய www.tnstc.in  மற்றும் TNSTC Official app மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.


சபரிமலைக்குச் செல்லும் அரசு பேருந்துகளை 60 நாட்களுக்கு முன்பே பதிவு செய்து கொள்ளும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.