ஆளுநர் தனது எக்ஸ் தளத்தின் பதிவு மூலம் சட்டப்பேரவையை அவமதித்துவிட்டார் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். 


சட்டப்பேரவையின் 3வது நாள் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் நாளில் ஆளுநர் ஆர்.என்.ரவி அரசு தயாரித்து அளித்த உரையை வாசிக்காமல் புறக்கணித்து அவையில் இருந்து வெளியேறினார். கடந்த 2023, 2024ஆம் ஆண்டுகளில் உரையாற்றிய ஆளுநர் அரசு தயாரித்த உரையில் சில தகவல்களை சேர்த்தும், சில தகவல்களை தவிர்த்தும் வாசித்தார். இது அப்போது சலசலப்பை ஏற்படுத்தியது. 


தற்போதைய முதல் நாள் கூட்டத்தில் ஆளுநர் வந்ததும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகன், காங்கிரஸ், அதிமுக உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பி முற்றுகையிட்டனர். 


இதையடுத்து ஆளுநர் அங்கிருந்து உரையை வாசிக்காமல் கிளம்பி சென்றார். இதுகுறித்த விளக்கத்தில், “தமிழ்தாய் வாழ்த்துக்கு பின் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை. இசைக்க வேண்டும் என ஆளுநர் கேட்டார். ஆனால் மறுக்கப்பட்டது. 


இது அரசியல் சாசனத்துக்கு இழைக்கப்பட்ட அவமரியாதை” என தெரிவிக்கப்பட்டது. 


முதல்வர் ஸ்டாலினின் சமூக வலைதள பதிவில், ‘‘கடந்த ஆண்டுகளில் அரசின் உரையில் இருந்ததை வெட்டியும், இல்லாததை ஒட்டியும் வாசித்த ஆளுநர், இம்முறை வாசிக்காமலேயே போயிருப்பது சிறுபிள்ளைத்தனமானது. தமிழக மக்களையும், அரசையும், நூற்றாண்டு கண்ட தமிழக பேரவையையும் தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. "தனது அரசியல் சட்டக்கடமைகளை செய்யவே மனமில்லாதவர் அந்த பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்?" என்பதே அனைவர் மனதிலும் எழும் வினா’’ என தெரிவித்துள்ளார்.


இதையடுத்து ஆளுநர் தரப்பில் எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிடப்பட்டது. அதில் “இன்று தமிழ்நாடு மாநில சட்டப்பேரவை நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமாக தணிக்கை செய்யப்பட்டிருப்பது அவசரகாலத்தை நாட்டுக்கு நினைவூட்டுகிறது. மக்கள் குறிப்பாக தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகள் பேரவையின் உண்மையான நடவடிக்கைகள், அதில் உள்ள அவர்களின் பிரதிநிதிகளின் நடத்தை ஆகியவற்றை அறிவதில் இருந்து விலக்கப்பட்டனர். அதற்கு பதிலாக மாநில அரசின் வெட்டப்பட்ட காட்சிகள் மட்டுமே வழங்கப்பட்டன. தேசிய கீதம் தொடர்பான அடிப்படைக் கடமையைப் புறக்கணித்ததன் மூலம் அரசியலமைப்பு அவமதிக்கப்பட்டது மட்டுமன்றி, அரசியலமைப்புச் சட்டம் உறுதிசெய்யப்பட்ட பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படை உரிமையும் வெட்கக்கேடான முறையில் நசுக்கப்பட்டது. இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 


இந்நிலையில் இன்று நடைபெற்ற சட்டப்பேரையில் சபாநாயகர் அப்பாவு ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்தார். 


அப்போது பேசிய அவர், ஆளுநர் இருக்கும்போது பதாகை ஏன் காட்டுனீங்க என்று அதிமுகவினருக்கு கேள்வி எழுப்பினார். 


மேலும், ஆளுநர் உரையை டிடி பொதிகை நேரலை செய்ய அனுமதிக்காதது ஏன் எனவும் விளக்கம் அளித்தார். அதாவது “ஆளுநர் உரையின்போது டிடி பொதிகை டிவி மூலம் வெட்டி ஒட்ட முயற்சி நடந்தது. வெட்டி, ஒட்டுவார்கள் என முன் கூட்டியே கண்டுபிடித்ததால் பொதிகைக்கு நேரலை தரப்படவில்லை. 3 நிமிடங்கள் ஆளுநர் அவையில் இருந்தார். அதன் பின் ஆளுநர் வெளியேறிவிட்டார். பொதிகைக்கு நேரலை கொடுக்க ஆளுநர் தரப்பில் இருந்து நெருக்கடி கொடுக்கப்பட்டது. பொதிகை மூலம் நினைத்ததை நடத்த முடியவில்லை என்பதால் ஆளுநர் பதிவிட்டிருக்கிறார். 


ஆளுநர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டது மக்கள், பேரவை உறுப்பினர்களை அவமானப்படுத்தும் செயல். ஆளுநரின் இந்த செயலை தமிழ்நாடு சட்டப்பேரவை வன்மையாக கண்டிக்கிறது. தேசிய கீதத்தை முதலில் பாட வேண்டும் என கோரிக்கை வைக்க ஆளுநருக்கு உரிமை இல்லை. ஆளுநர் சட்டப்படி நடக்க வேண்டுமே தவிர கோரிக்க வைக்க முடியாது. எழுதி கொடுப்பதை வாசிப்பது தான் ஆளுநரின் கடமை” எனத் தெரிவித்தார்.