நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அது குறித்து நாம் தமிழர் கட்சி சார்பில் தலைமை நிலையச் செயலாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்திலிருந்து கேரளாவுக்குக் கனிமவளங்களைக் கொள்ளையடித்துக் கொண்டுசெல்வதைக் கண்டித்து, நேற்று (10-10-2021) கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களின் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசியதற்காக தமிழ்த்தேசிய ஊடகவியலாளர் 'சாட்டை' துரைமுருகன் அவர்களைக் கைதுசெய்திருக்கும் திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, பழிவாங்கும் போக்கோடு பொய்யாகக் குற்றஞ்சாட்டி, வழக்குப் புனைந்து சிறைப்படுத்தியிருக்கும் கருத்துச் சுதந்திரத்தின் மீதான இத்தாக்குதலை ஒருபோதும் ஏற்க முடியாது.
"சாட்டை" துரைமுருகனை தற்போதையச் சூழலில் கட்சியை விட்டு நீக்கி, அவரைக் கைவிட்டதுபோல கட்சியின் கடிதத்தாளைப் போலியாக உருவாக்கி, சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பி வருவது மிக இழிவான அரசியலாகும். இத்தருணத்தில், அவர் இவ்வழக்குகளிலிருந்து மீண்டுவரவும், சிறையிலிருந்து வெளிவரவும் நாம் தமிழர் கட்சி அவரோடு முழுமையாகத் துணைநிற்கும் எனத் தெரியப்படுத்துகிறோம்.
சாட்டை துரைமுருகன் கைது தொடர்பான செய்தி விபரம் இதோ:
திருச்சியில் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் கடைகாரரை மிரட்டியது, முன்னாள் முதல்வர் கருணாநிதியை அவதூறாக பேசியது, உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டு, பல நாட்கள் சிறையில் இருந்த துரைமுருகன், சமீபத்தில் தான் வெளியே வந்தார். அவர் ஜாமீனில் வெளியே வந்தது முதலே பலரையும் விமர்சித்து தனது யூடியூப் சேனலில் பேசி வந்த நிலையில், தக்கலையில் நடைபெற்ற கூட்டத்திலும் சர்ச்சைக்குரிய கருத்துகளை முன் வைத்து பேசியிருந்தார்.
இதற்கு திமுகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது, சமூக வலைதளங்களில் சாட்டை துரைமுருகனை தமிழ்நாடு அரசு உடனே கைது செய்யவேண்டும் என்று உடன்பிறப்புகள் பொங்கி எழுந்தனர். தலைமையுடன் தொடர்பில் இருக்கும் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் அவர் விரைவில் கைது செய்யப்படுவார் கவலை வேண்டாம் என்று சொல்லி கொந்தளித்துக்கொண்டவர்களை அமைதிப்படுத்தினர்.
இந்நிலையில், கூட்டம் முடிந்து சென்னை திரும்பிக்கொண்டிருந்த சாட்டை துரைமுருகனை நாங்குநேரியில் வைத்து போலீசார் கைது செய்தனர். பின்னர், அங்கிருந்து பத்மநாபபுரம் கொண்டுச்செல்லப்பட்ட அவர், குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தீனதயாளன் முன்பு ஆஜர்படுத்தப்பட, சாட்டை துரைமுருகனை வரும் 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். கைது செய்யப்பட்டுள்ள சாட்டை துரைமுருகன் மீது ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது போடப்பட்டுள்ள பிரிவுகள் விபரம் இதோ:
இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம்
- 153 - வேண்டுமென்றே திட்டமிட்டு கலவரத்தை தூண்டும் வகையில் பேசுவது, செயல்படுவது
- 153A - இரு பிரிவினரிடையே விரோதத்தை ஏற்படுத்தும் வ் வகையில் பேசுவது
- 143 - சட்டவிரோதமாக அல்லது அனுமதியின்றி கூட்டம் கூட்டி பேசுவது
- 505(2) – மதங்கள் குறித்தும் வழிபாடுகள் பற்றியும் பொதுவெளியில் அவதூறு செய்வது / பேசுவது
- 506(1) – கொலை மிரட்டல், மிரட்டும் தொனியில் பேசுவது, எச்சரிப்பது
- 269 – நோய் தொற்று பரவும் வகையில் செயல்படுதல், கூட்டம் கூட்டுதல்