இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி வசூலிக்க விலக்கு கேட்ட நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த நிலையில், அவருக்கு ஆதரவாக ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நடிகர் விஜய் தனது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரிவிலக்கு கோரியதற்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்திருப்பது தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.


சினிமா துறையில் தனது சொந்த உழைப்பால் உயர்ந்து, தான் வாங்கும் ஊதியத்திற்கு முறையாக வருமான வரியாக கோடிக்கணக்கான பணத்தை அரசிற்கு செலுத்தி வருபவர் நடிகர் விஜய். அந்த பணம் பல ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவிகரமாக இருந்துள்ளது. எப்போதும் ஒரு மனிதரின் நிறைகளை குறைவாக பேசுவதும், சிறுசிறு குறைகளை மிகைப்படுத்தி பேசுவது மனித இயல்பாக இருக்கிறது.


மேலும் இறக்குமதி செய்த வாகனங்களுக்கு வரிவிலக்கு கேட்பது அவரவரின் உரிமை சார்ந்தது. இந்த உரிமை நடிகர் விஜய் அவர்களுக்கும் உண்டு. சினிமா பிரபலம் என்றால் அவருக்கு பொருந்தாது என்றாகாது. இதேபோல் 2012-ல் வரிவிலக்கு கேட்டு சச்சின் டெண்டுல்கர் உட்பட பலரும் கோரிக்கை வைத்தார்கள். இதில் சச்சினுக்கு ரூ.1.13 கோடி வரி விலக்கு கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


எனவே சரிவர புரிந்து கொள்ளாமல் தவறான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை தவிர்க்க வேண்டும். எந்த மனிதராக இருந்தாலும் பல கஷ்டங்களையும் விருப்பு வெறுப்புகளையும் அவமானங்களையும் தாண்டி தான் உயர்நிலைக்கு வரமுடியும். அப்பேற்பட்டவர்களை பாராட்ட மனம் வரவில்லை என்றாலும் பரவாயில்லை குறைகள் கூறுவதை தவிர்க்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 






கடந்த 2012ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி வசூலிக்க விலக்கு கேட்டு நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வரி விலக்கு கேட்ட நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த அபராதத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம், விஜய்யின் கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்தது.


மேலும், சமூக நீதிக்கு பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள் வரி விலக்கு கோருவதை ஏற்க முடியாது என்றும், நடிகர்கள் ரியல் ஹீரோக்களாக இருக்க வேண்டும்; ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது கண்டனம் தெரிவித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், வரி என்பது நன்கொடையல்ல; கட்டாயம் பங்களிப்பு என கருத்து கூறினார்.