Robo Shankar Death: சில நிமிடங்கள் சந்தித்தாலும் சிரிக்க வைக்க கூடியவர்! கலைத்துறையில் தன் கடின உழைப்பால் வெற்றி கண்டவர்! தம்பி ரோபோ சங்கரின் மறைவு மிகுந்த மனவேதனையை அளிக்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

ரோபோ சங்கர் மரணம்:

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் ரோபோ சங்கர். உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட இவர் நேற்று (செப்டம்பர் 18) சென்னை ஜெம் மருத்துவமனையில் உயிரிழந்தார். நகைச்சுவை மட்டும் இன்றி ஆரம்ப காலங்களில் மேடை நிகழ்ச்சிகளிலும் ரசிகர்களை சந்தோச படுத்திய ரோபோ சங்கரின் திடீர் மரணம் ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது என்றே சொல்லவேண்டும். சினிமா மட்டும் இன்றி தனிப்பட்ட வாழ்க்கையிலும் அனைவரிடமும் மிகுந்த அன்போடு பழகக் கூடிய ரோபோ சங்கரின் மரணத்திற்கு பல்வேறு தரப்பிலும் இருந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது சமூக வலைதள பக்கத்தில் ரோபோ சங்கருக்கு இரங்கல் தெரிவித்தார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரோபோ சங்கர் வீட்டிற்கு நேரடியாக சென்று மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார். சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சீமான், அண்ணாமலை, பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் மற்றும் சினிமா பிரபலங்களும் ரோபோ சங்கருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கலங்கிய ஜெயக்குமார்:

இந்த நிலையில் தான் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரோபோ சங்கரை நினைத்து மனம் உருகியுள்ளார்.

அதாவது, ”சில நிமிடங்கள் சந்தித்தாலும் சிரிக்க வைக்க கூடியவர்! கலைத்துறையில் தன் கடின உழைப்பால் வெற்றி கண்டவர்! தம்பி ரோபோ சங்கரின் மறைவு மிகுந்த மனவேதனையை அளிக்கிறது! உன்னால் சிரித்தவர்கள் இன்று உனக்காக அழுகின்றனர் ரோபோ” என்று கூறியுள்ளார்.