RM Veerappan History: அண்ணாவின் உதவியாளர், எம்ஜிஆர் தோழர், ஸ்டாலின் ஆதரவாளர்: யார் இந்த ஆர்.எம்.வீரப்பன்?

RM Veerappan History in Tamil: திமுக – எம்ஜிஆர் பிரச்சினையில், எம்ஜிஆர் வெளியே வந்து அதிமுகவை உருவாக்க முக்கியக் காரணமாக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன்.

Continues below advertisement

அண்ணா, பெரியார் ஆகிய ஆளுமைகளிடம் உதவியாளர் ஆகவும் எம்ஜிஆரின் வலது கரமாகவும் திகழ்ந்தவர் ஆர்.எம்.வீரப்பன். ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்து, திமுகவுக்கும் ஆதரவளித்தவர் ஆர்.எம்.வீ? (RM Veerappan) யார் இவர்? பார்க்கலாம். 
 
1926ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம், வல்லத்திராக்கோட்டை என்னும் கிராமத்தில் பிறந்தவர் ஆர்.எம்.வீரப்பன். தனது இளம் வயதிலேயே கலைத் துறையில் ஆர்வம் கொண்டு, நாடகக் குழுவில் சேர்ந்தார். நிர்வாகத்திலும் அவருக்கு இயல்பாகவே ஈடுபாடு இருந்ததால், நாடக நிர்வாகத்தையும் பார்த்துக்கொண்டார். 

Continues below advertisement

அதிமுக உருவாகக் காரணமானவர்

பின்னாட்களில் பெரியாரின் அறிமுகம் கிடைத்து, அவருக்கு உதவியாளர் ஆனார் ஆர்.எம்.வீ. தொடர்ந்து அண்ணாவின் உதவியாளர் ஆனவருக்கு, எம்ஜிஆரின் அறிமுகமும் கிடைத்தது.  நாடகத் துறையில் இயங்கி வந்தவர், எம்ஜிஅர் காரணமாக திரைத் துறையிலும் கால் பதித்தார். திமுக – எம்ஜிஆர் பிரச்சினையில், எம்ஜிஆர் வெளியே வந்து அதிமுகவை உருவாக்க முக்கியக் காரணமாக இருந்தவர் ஆர்.எம்.வீ. 


அரசியலிலும் கால் பதித்த ஆர்.எம்.வீரப்பன், 1977 ஆம் ஆண்டு முதல் 1986 ஆம் ஆண்டு வரை சட்டமேலவை உறுப்பினராக இருந்தார். எம்ஜிஆர் சுடப்பட்டு கட்டுடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளிநாட்டில் சிகிச்சை பெறும் வீடியோவைப் பொது வெளியில் வெளியிட்டு, அதிமுகவுக்கு ஆதரவைப் பெருகச் செய்தார்.

ஜானகி அணிக்கு ஆதரவு

எம்.ஜி.ஆர். மறைவிற்கு பிறகு அவரின் மனைவி ஜானகிக்கு ஆதரவு அளித்தாலும், பின்னாட்களில் ஜெயலலிதாவுடன் சேர்ந்து தனது அரசியல் பயணத்தை தொடர்ந்தார்.  1986ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் நெல்லை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். 1991ஆம் ஆண்டு காங்கேயம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அமைச்சரவைகளில் மொத்தம் 5 முறை அமைச்சராகவும் இருந்திருக்கிறார். உள்ளாட்சித் துறை, கல்வித்துறை, இளைஞர் நலன், செய்தி மக்கள் தொடர்புத் துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறைகளில் அமைச்சராகப் பணியாற்றி உள்ளார். ஆசியாவிலேயே மிக உயரமான ஆலய கோபுரங்களான ஸ்ரீரங்கம் மற்றும் தென்காசிக் கோயில் கோபுரங்கள் இவர் அமைச்சராக இருந்தபோது கட்டப்பட்டவை. அதிமுகவின் இணைப் பொதுச் செயலாளராக1989 முதல் 1983 வரை இருந்தார் ஆர்.எம்.வீரப்பன் (RM Veerappan). 


ரஜினி உடனான நெருக்கத்தால் பறிபோன அமைச்சர் பதவி 

நடிகர் ரஜினியுடனும் நெருக்கம் பாராட்டிய ஆர்.எம்.வீ., தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் பாட்ஷா படத்தைத் தயாரித்திருந்தார். படத்தில் வெள்ளி விழாவில் பேசிய ரஜினி, அடுத்து அதிமுக ஆட்சிக்கு வந்தால், ஆண்டவனால் கூட தமிழ்நாட்டைக் காப்பாற்ற முடியாது எனப் பேசியிருந்தார். தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் நிலவுவதாகவும் கருத்துத் தெரிவித்திருந்தார். அந்த விழாவில் ஆர்.எம்.வீரப்பனும் உடனிருந்தது அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. அமைச்சர் பதவியை வீரப்பனிடம் இருந்து பறித்தார் ஜெ. 


திமுகவுக்கு ஆதரவு அளித்த ஆர்.எம்.வீ. 

தொடர்ந்து 1995-ல் தனியார் அமைப்பு நடத்திய விழா ஒன்றில் பேசிய வீரப்பன், ரஜினியைப் பற்றிப் புகழ்ந்து பேசி இருந்தார். இதை அடுத்து அதிமுக உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கப்பட்டார். இதனால் எம்ஜிஆர் கழகம் என்று தனிக்கட்சி தொடங்கினார். எனினும் இந்தக் கட்சி, திமுகவுக்கு ஆதரவு அளித்து வந்தது. 1996ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுகவுடன் கூட்டணி அமைத்தார். தொடர்ந்து கருணாநிதிக்கும், மு.க.ஸ்டாலினுக்கும் ஆதரவு அளித்து வந்தார் ஆர்.எம்.வீ. 


முதுமை காரணமாக பொது வாழ்க்கையில் இருந்தும் அரசியலில் இருந்தும் ஒதுங்க ஆரம்பித்தார் ஆர்.எம்.வீரப்பன். இந்த நிலையில், வயது மூப்பு காரணமாக இன்று அவர் சென்னையில் காலமானார். அவருக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

Continues below advertisement