தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். திரையிலும், அரசியலிலும், மக்கள் மனதிலும் நீங்கா இடம்பெற்று, மறைந்த பிறகும் பெரும் புகழுடன் இருப்பவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரின் இந்த வெற்றிக்கு பக்கபலமாக இருந்தவர்களின் மிக மிக முக்கியமானவர் ஆர்.எம்.வீரப்பன்(RM Veerappan).
எம்.ஜி.ஆருக்கு உடன்பிறவா சகோதரனாகவே இருந்து அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றவர் ஆர்.எம்.வீரப்பன். எம்.ஜி.ஆரை அடித்தட்டு மக்களிடம் வரை கொண்டு சென்ற நாடோடி மன்னன் முதல் இதயக்கனி வரை அத்தனை வெற்றி படங்களிலும் ஆர்.எம்.வீரப்பனின் உழைப்பு இருந்தது. எம்.ஜி.ஆரின் மிகப்பெரிய நம்பிக்கைக்குரியவராக ஆர்.எம்.வீரப்பன் திகழ்ந்தார்.
எம்.ஜி.ஆரின் விசுவாசி:
இதனால், அரசியலில் நுழைந்தது முதல் தனிக்கட்சி தொடங்கி ஆட்சியை கைப்பற்றி உயிரிழந்தது வரை எம்.ஜி.ஆருக்கு பக்கபலமாக ஆர்.எம்.வீரப்பன் இருந்தார். இன்று அரசியல் கட்சிகள் தங்களது கட்சியை மக்களிடம் கொண்டு செல்ல பி.ஆர். நிறுவனங்கள் எனும் மக்கள் தொடர்பு நிறுவனங்களை பயன்படுத்தி வருகின்றனர். 2014ம் ஆண்டு இந்தியளவில் மோடியை கொண்டு சென்றதில் பிரசாந்த் கிஷோர் எனும் அரசியல் ஆலோசகரின் பங்கு மிகப்பெரியது என்பதை நாம் அறிவோம்.
அந்த காலத்தில் எம்.ஜி.ஆருக்கு மிகப்பெரிய அரசியல் ஆலோசகராகவும், அவருக்கு ஒரு பிரசாந்த் கிஷோராகவும் செயல்பட்டவர் ஆர்.எம்.வீரப்பன். எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இணைந்து மிகத் தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருந்தார். அண்ணாவின் விசுவாசியான எம்.ஜி.ஆர். தனது நண்பர் கருணாநிதியுடன் இணைந்து தி.மு.க.விற்காக தீவிரமாக உழைத்துக் கொண்டிருந்தார்.
ராஜ தந்திரங்கள்:
இதையடுத்து, எம்.ஜி.ஆருக்கு தி.மு.க. சார்பில் போட்டியிட அண்ணா வாய்ப்பு அளித்தார். 1967ம் ஆண்டு எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட ஒட்டுமொத்த தமிழகமும் அதிர்ந்தது. குறிப்பாக, எம்.ஜி.ஆரின் குரல் வளம் மிக மோசமாக பாதிக்கப்பட்டதை, அதன்பின்பு அவர் நடித்த படங்களில் நாம் அறியலாம். இந்த சம்பவத்தை எம்,ஜி.ஆரின் அரசியல் செல்வாக்கு உயரவும், அதை வாக்குகளாகவும் மாற்றிக்காட்டியவர் ஆர்.எம்.வீரப்பன்.
எம்.ஜி.ஆர். 1967ம் ஆண்டு பரங்கிமலை தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டபோது எம்.ஜி.ஆர். குண்டு காயம் ஏற்பட்டு கழுத்தில் கட்டுப்போட்ட நிலையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தமிழ்நாடு முழுவதும் போஸ்டராக அடித்து ஒட்டச் செய்தார் எம்.ஜி.ஆர். தமிழ்நாடு முழுவதும் வெறிப்பிடித்த ரசிகர்களை கொண்டிருந்த எம்.ஜி.ஆர் மீது இந்த புகைப்படம் மிகப்பெரிய அனுதாபத்தை ஏற்படுத்தியது. இதனால், அந்த தேர்தலில் எம்.ஜி.ஆர். மிகப்பெரிய வெற்றி நாயகனாக சட்டமன்ற உறுப்பினராக சட்டசபைக்குச் சென்றார்.
ஆட்சிக்கட்டிலில் ஏற்றி அழகுபார்த்தவர்:
எம்.ஜி.ஆர். தி.மு.க.வை விட்டு விலகி அ.தி.மு.க.வைத் தொடங்கி தனிக்கட்சி ஆரம்பித்த போதும் எம்.ஜி.ஆரின் விசுவாசியாகவே அவருடன் இருந்தவர். 1980ம் ஆண்டு மீண்டும் தனது பழைய ஃபார்முலாவை பயன்படுத்தி எம்.ஜி.ஆரை முதலமைச்சராக மாற்றினார்.
எம்.ஜி.ஆர். மேல்சிகிச்சைக்காக அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தருணம் அது. தனிக்கட்சி தொடங்கியது முதலே ஆட்சியை இரண்டு முறை கைப்பற்றியிருந்தை எம்.ஜி.ஆர். மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்ற நோக்கத்தில் போட்டியிட்டார். ஆனால், அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது.
அரசியல் வித்தகன்:
அமெரிக்க மருத்துவமனையில் எம்.ஜி.ஆர். அனுமதிக்கப்பட்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், அவர் உடல்நலம் தேறி வரும் வீடியோக்கள், அவர் சிரிக்கும் புகைப்படங்கள், அவர் நடைபயிற்சி மேற்கொள்ளும் வீடியோக்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி கட்டிலில் அமர அயராது பாடுபட்டவர் ஆர்.எம்.வீரப்பன்.
அரசியல் வித்தகனாக எம்.ஜி.ஆர் இறக்கும் வரை அவரை திரையிலும், அரசியலிலும் வெற்றி பெற வைத்தவர் ஆர்.எம்.வீரப்பன். அவரின் ராஜதந்திர வியூகங்கள் கருணாநிதி தலைமையிலான தி.மு.க.வை, அ.தி.மு.க. எதிர்கொள்ள மிகப்பெரிய பக்கபலமாக இருந்தது என்பதை மறுக்க முடியாது. அதன்பின்பு, ஜானகி முதலமைச்சராக வேண்டும் என்று வலியுறுத்தினார். பின்னர், ஜெயலலிதாவுடன் இணைந்து பணியாற்றி அவரது அமைச்சரவையில் அமைச்சராக பணிபுரிந்தார்.