நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் மீண்டும் தீர்மானம்: அமைச்சர் அருண்ராஜ் உறுதி!
கல்வி, மருத்துவம் மாநிலப் பட்டியலில் இருக்க வேண்டும் என்பதே அரசின் கொள்கை: அமைச்சர் அருண்ராஜ் !

விழுப்புரம் : நீட் கிராமப்புற மாணவர்களுக்கும் மாநில உரிமைகளுக்கும் எதிரானது என்றும், கல்வி மற்றும் மருத்துவம் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதே அரசின் கொள்கை நிலைப்பாடு என்றும். நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்படும் இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற 11-ஆவது பட்டமளிப்பு விழாவில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். விழாவை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், கடந்த காலங்களில் விழுப்புரம் போன்ற பின்தங்கிய மாவட்டங்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்றும், தற்போதைய அரசு அனைத்து மாவட்ட மக்களுக்கும் தரமான மருத்துவ சேவைகளை கொண்டு சேர்க்க உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார்.
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரத்தில் அமைந்துள்ள விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மீது பொதுமக்கள் பெரிதும் நம்பிக்கை வைத்திருப்பதாகவும், குறிப்பாக சாலை விபத்து மற்றும் அவசர சிகிச்சை நோயாளிகள் அதிக அளவில் இங்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மருத்துவமனைக்கு தேவையான அனைத்து அடிப்படை மற்றும் மேம்பட்ட வசதிகளையும் அரசு ஏற்படுத்தித் தரும் என உறுதியளித்த அமைச்சர், விரைவில் புதிய கிரிட்டிக்கல் கேர் பிளாக் பணிகள் தொடங்கப்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும் மருத்துவமனையின் வளர்ச்சிக்காக நிர்வாகம் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தற்போது 611 படுக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாக கூறினார். இதனால் கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியிடங்களை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார். விழுப்புரம் மாவட்டத்திற்கு தனி சூப்பர் ஸ்பெஷாலிட்டி சிகிச்சைப் பிரிவு தேவை என்ற கோரிக்கை குறித்து கேட்டபோது, அதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் பரிசீலிக்கப்படும் என்றும், கிரிட்டிக்கல் கேர் பிளாக் தொடங்கப்பட்ட பிறகு அடுத்த கட்டமாக சூப்பர் ஸ்பெஷாலிட்டி வசதிகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
புற்றுநோய் சிகிச்சைக்கான கதிர்வீச்சு இயந்திரம் அமைக்க வேண்டிய அவசியம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தேவையான வசதிகளை ஏற்படுத்த நிதி ஒதுக்கீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மருத்துவமனைகளில் நோயாளி பராமரிப்பு குறைபாடு, சுகாதார வசதிகள் பற்றாக்குறை போன்ற புகார்கள் குறித்து கேட்டபோது, நல்ல நிர்வாகத்தின் மூலம் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்றும், சுத்தமான காத்திருப்பு அறைகள், கழிப்பறைகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரியும் மருத்துவப் பணியாளர்களை நிரந்தரப்படுத்துவது தொடர்பாக பல்வேறு துறைகளிலிருந்தும் கோரிக்கைகள் வந்துள்ளதாகவும், அவை அனைத்தையும் அரசு கனிவுடன் பரிசீலித்து உரிய முடிவுகளை எடுக்கும் என்றும் கூறினார். மருத்துவக் கல்லூரிக்கு தேவையான மின்சார வசதிகளை மேம்படுத்த புதிய டிரான்ஸ்பார்மர் அமைப்பது தொடர்பாக மின்சாரத் துறையுடன் ஆலோசித்து விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
தமிழகத்தில் மருத்துவர்-நோயாளி விகிதம் இந்திய அளவில் சிறப்பாக உள்ளதாகவும், அனைத்து மக்களுக்கும் தரமான மருத்துவ சேவை கிடைக்க தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். அரசு மருத்துவமனைகளில் கையூட்டு பெறப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து பேசிய அவர், லஞ்சம் மற்றும் ஊழலற்ற நிர்வாகமே அரசின் நோக்கம் என்றும், தவறுகள் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மருத்துவ கவுன்சிலிங் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை மறுத்த அமைச்சர், மாணவர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கான அனைத்து கவுன்சிலிங்குகளும் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற்று வருவதாக கூறினார்.
நீட் தேர்வு குறித்து அரசின் நிலைப்பாட்டை விளக்கிய அமைச்சர், நீட் கிராமப்புற மாணவர்களுக்கும் மாநில உரிமைகளுக்கும் எதிரானது என்றும், கல்வி மற்றும் மருத்துவம் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதே அரசின் கொள்கை நிலைப்பாடு என்றும் தெரிவித்தார். நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். மேலும், கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்கள், மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் வரை தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
Before You Go
Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
ட்ரெண்டிங் செய்திகள்






















