தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளின் வாசலில் ரெம்டெசிவிர் மருந்துக்காகக் கையேந்தி நிற்கிறார்கள் பொதுமக்கள். வேறு மாவட்டங்களில் இருந்து வந்தவர், ஒருவாரமாக வரிசையில் நிற்பவர், அடுத்த வேளையே தனது உறவினருக்கு ரெம்டெசிவிர் கொடுத்தே ஆகவேண்டும் என்கிற நெருக்கடியில் இருப்பவர் என வரிசையில் நிற்கும் ஒவ்வொருவரிடமும் ஒரு கண்ணீர்க்கதை. இதற்கெல்லாம் பதிலாக ஃபார்மா பாய்ண்டுகள் ‘இன்று போய் நாளை வா’ எனக் கைவிரிக்கின்றன. இந்தச் சூழலில் சேலம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்துக்காக காத்திருக்கும் மக்களின் பதிவுகள் இவை..


"8-ஆம் தேதி என்னுடைய தந்தைக்காக ரெம்டெசிவிர் வாங்க வந்தேன். அப்போது கிடைக்கவில்லை 12-ஆம் தேதி இன்று தான் எனக்கு மருந்து கிடைத்தது. கிட்டதட்ட மூன்று நாட்களாக இதற்காக கூட்டத்தில் நின்றேன்"என ஒருவர் நம்மிடம் கூறுகிறார். மற்றொருவர், "நான் தருமபுரி அருகே உள்ள கிராமத்திலிருந்து வருகிறேன். என்னுடைய தந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவருடைய சிடி ஸ்கேன் சரியாக இல்லை என்பதால் எனக்கு 3 மருந்துகள் மட்டுமே தந்தனர்" எனக் கூறி அழுகிறார். 


"கடந்த சனிக்கிழமை மருந்து வாங்க வந்தேன். ஞாயிற்றுகிழமை வரும்படி கூறினார்கள். ஞாயிற்றுகிழமை வந்தேன். அப்போது வெறும் டோக்கன் மட்டும் கொடுத்தனர். மீண்டும் திங்கட்கிழமை வந்தேன். அப்போது என்னுடைய டோக்கன் நம்பர் 78 என்பதால் அமர்ந்திருந்தேன். சிறிது நேரத்திற்கு பிறகு காவல்துறையினர் வந்து டோக்கன் படி அல்ல யார் முன்னே செல்கிறீர்களோ அவர்களுக்கு மருந்து என்றனர். அதற்குபின் எல்லோரும் கூட்டமாக நின்றனர். அப்போது நான் 140-ஆவது ஆளாக இருந்தேன். அப்போது சமூக இடைவெளி உள்ளிட்ட எதுவும் இங்கு கடைபிடிக்கப்படவில்லை" என விரக்தியுடன் ஒருவர் கூறினார்.


 



"நான் திங்கட்கிழமை வந்தேன் 12-ஆம் தேதி இன்று தான் எனக்கு டோக்கன் கொடுத்துள்ளார்கள். என்னுடைய உறவினருக்கு நாளைக்குள் ரெம்டெசிவிர் செலுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இங்கு இன்னும் மருந்து கிடைக்கவில்லை. ஒருநாளைக்கு 50 பேருக்கு தான் மருந்து தருகிறார்கள். இங்கேயே இல்லை என்கிறார்கள். ஆனால் வெளியே மட்டும் இந்த மருந்து 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. மருந்து கிடைக்க நான்கு ஐந்து நாட்கள் ஆகும் என்றால் அதுவரை நோயாளிகளின் உயிருக்கு யார் உத்தரவாதம் தருவா" என ஆவசேத்துடன் ஒருவர் கேள்வி எழுப்பினார். 


மேலும் நோயாளிகளின் அவசரத்தை புரிந்து கொள்ளாமல் இப்படி பல வகை விவரங்களை கேட்டு தாமதப்படுத்தப்படுகின்றது என்றும் சிலர் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.