ரெம்டெசிவிர் மருந்து அதிகாரப்பூர்வமாக மருத்துவமனைகளில் கிடைக்கும் என அரசு அறிவிப்பதற்கு முன்பிருந்தே சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மக்கள் கூட்டம் வரிசைகட்டத் தொடங்கியிருந்தது. எல்லை மாவட்டங்களில் இருந்தெல்லாம் வந்து கால்கடுக்க நிற்கத் தொடங்கியிருந்தார்கள் மக்கள். மருந்துகள் மாவட்டவாரியாக தரப்படும் என அரசு அறிவித்தபிறகும் கூட இந்தக் கூட்டம் குறையவில்லை. ’உயிர்பிச்சை கேட்கின்றோம் ஒரு மாத்திரையாவது கொடுங்கள்’ என மடியேந்துபவர்களின் கண்ணீர் பதிவு


‘செத்துட்டாங்கனு சொன்னாலும் டோக்கன் கேட்பாங்களா?’ எனக் கொதித்து எழுந்துகொண்டிருந்தார் வரிசையில் நின்றுகொண்டிருந்த ஒரு பெண்மணி. ’மூணு நாளா நிக்குறேன். இப்போ டோக்கன் வாங்குனவங்களுக்கே ஒருவாரம் கழிச்சிதான் தராங்க. டோக்கனு கூட அப்புறமா வாங்கிக்குறோம். இப்போ உயிரக் காப்பாத்த ஒரேயொரு மருந்து கொடுங்கனுதான் கேட்குறோம்.பத்து நாள் கழிச்சு வரகொள்ள எங்கவீட்டு மனுசன் உயிரோட இருக்கனும்ல’ எனக் கேள்வி எழுப்புகிறார் அவர்.


‘எனக்கு டோக்கனே எட்டு நாள் கழிச்சுதான் கிடைக்கும்னு எழுதி கொடுத்துருக்காங்க. அதுக்கப்புறம் ஒரு வாரம் காத்திருந்துதான் ரெம்டெசிவிர் வாங்கனும்.வீட்டம்மா ஹாஸ்பிட்டல்ல படுத்துருக்காங்க.என்ன செய்யறதுனே புரியல’ என செய்வதறியாமல் நிற்கிறார் மற்றொரு நபர்.


 



திருத்தணியிலிருந்து தந்தையும் மகளுமாக வந்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனை வாசலில் காத்துக்கொண்டிருந்தனர் அந்த இருவரும்,’எங்கண்ணன் ஹாஸ்பிட்டல்ல கெடக்கு.காப்பாத்தனும். இவங்க சொன்ன நேரத்துக்கு முன்னையே வந்துட்டோம். ஆனா இங்க மருந்து இல்லைனு சொல்லறாங்க’ எனத் தன் அண்ணனைக் காப்பாற்றவேண்டும் எனப் பரிதவிப்போடு நிற்கிறார் அந்தப் பெண்மணி.

அக்காவின் குழந்தைகளுக்காக மருந்து வாங்க வரிசைகட்டி நின்ற தம்பிகள் அங்கே அதிகம் தென்பட்டனர், ‘உங்கக் கால்ல வேணாலும் விழறேன் சார். அக்கா குழந்தையைக் காப்பாத்தனும்’ என அழுகிறார் அப்படியொரு ஒரு இளைஞர்.

கால் பிடித்துக் கதறுபவர்களைக் காப்பாற்றுமா அரசு?