Weather Update: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கோடை காலத்தில் வெயில் வாட்டி வதைப்பது வழக்கம். ஆனால், நடப்பாண்டில் பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
காற்றழுத்த தாழ்வு மண்டலம்:
தெற்கு கொங்கன் கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று காலை அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது வடக்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடையக்கூடும்.
கனமழை அபாயம்:
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வரும் 27ம் தேதி உருவாகக்கூடும். தென்மேற்கு பருவமழை கேரளாவில் அடுத்த இரண்டு தினங்களில் தொடங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதேசமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளில் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. கன்னியாகுமரி மாவட்டம் கோழிப்போர்விளையில் 2 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் 2-5 டிகிரி செல்சியஸ் இயல்பை விட குறைவாகவும், ஓரிரு இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை ஒட்டியும் இருந்தது.
அடுத்த 7 தினங்களுக்கு அறிவிப்பு:
தமிழ்நாட்டில் நாளை ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய ( மணிக்கு 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் மற்றும் 26ம் தேதி தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றம் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கனமழை அபாயம்:
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மற்றும் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது. திண்டுக்கல், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. திருப்பூர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று முதல் வரும் 27ம் தேதி வரை தென்தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டியுள்ள குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று, மணிக்கு 35 முதல் 45 கி.மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கி.மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடலில் இன்றும், நாளையும் வடக்கு ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளிலும் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கி.மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வரும் 25, 26 ஆகிய தேதிகளில் வடக்கு ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகள், அந்தமான் கடல்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 கி.மீட்டர் முதல் 45 கி.மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கி.மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இந்த நாட்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.