முதலமைச்சர் விஜய் சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட சம்பவத்தின் பின்னணியில் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டான வீடியோ இருப்பதாக தெரிய வந்துள்ளது.
முதலமைச்சர் விஜய் ஆய்வு
தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வரும் நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏதேனும் பிரச்னை, மக்களுக்கு குறை என்றால் பொறுப்பு அமைச்சர்கள்,தொகுதி எம்.எல்.ஏ.க்களை அனுப்பி உடனடியாக அதனை சரிசெய்ய உத்தரவிட்டுள்ளார். இப்படியான நிலையில் நேற்று காலை வழக்கம்போல தலைமைச் செயலகத்தில் அலுவல் பணிகளைப் பார்க்க வந்த அவர் மாலையில் திடீரென சென்னை எழும்பூரிலுள்ள அரசு தாய்சேய் நல மருத்துவமனைக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
முதலமைச்சர் விஜய் அங்கு வந்ததால் மருத்துவமனையில் இருந்த அனைவரும் இன்ப அதிர்ச்சியடைந்தனர். அங்கு சிகிச்சைப் பெற்றுவரும் தாய்மார்களிடம் உடல்நலம் விசாரித்ததோடு, சிகிச்சை மற்றும் வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு குழந்தையையும் தொட்டு ஆசீர்வதித்தோடு, கையில் தூக்கியும் மகிழ்ந்தார். மேலும் அங்கிருந்த மக்களிடம் உரையாடினார். மேலும் அங்கு பணியாற்றி வரும் மருத்துவர்கள் தொடங்கி ஊழியர்கள் வரை அனைவரையும் சந்தித்து ஆலோசனை நடத்தி பொதுமக்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
விஜய் சென்றதன் பின்னணி இதுவா?
பொதுவாக ஒரு பொது பிரச்னை என்றால் உடனடியாக நேரடியாக முதலமைச்சர் செல்ல மாட்டார்கள். சம்பந்தப்பட்ட அமைச்சர், அதிகாரிகள் போன்றோர் களத்திற்கு சென்று அதனை சரி செய்ய முயற்சிப்பார்கள். ஆனால் விஜய் நேரடியாக எழும்பூர் மருத்துவமனைக்கு செல்ல ஒரு வீடியோ தான் காரணம் என சொல்லப்படுகிறது.
35 விநாடிகள் ஓடும் ஒரு வீடியோவில் எழும்பூர் மருத்துவமனையில் நிர்வாகம் சரியில்லை சுத்தமாக இல்லை என சொல்லப்படுகிறது. அதில் பேசும் ஒரு பெண், ரொம்ப மோசமாக இருக்கு. இந்த மருத்துவமனைக்கு வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் தான் வருகிறோம். ஆனால் எல்லாவற்றிற்கும் பணம் வாங்குகிறார்கள். சுத்தம், சுகாதாரமே இல்லை. இந்த வீடியோவைப் பார்த்து விட்டு நீங்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை விஜய்க்கு நெருக்கமான தொடர்புடையது. காரணம் அந்த மருத்துவமனையில் தான் அவர் பிறந்தார். ஒவ்வொரு பிறந்தநாளின்போது இந்த மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி எல்லாம் நடத்தியுள்ளார். அப்படியிருக்கும் அந்த மருத்துவமனையில் இப்படி ஒரு பிரச்னை என்றதும் நேரடியாக முதலமைச்சர் விஜய் ஸ்பாட்டிற்கு சென்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயின் இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே மிகுந்த பாராட்டைப் பெற்றுள்ளது.
