"பிடிக்கப்பட்ட அரிய வகை பறவைகள், முறையான மருத்துவ பரிசோதனைகள் இல்லாமல், சென்னைக்கு கொண்டுவரப்பட்டதால், அதன் மூலம் வெளிநாட்டு நோய்க் கிருமிகள், இந்தியாவில் பரவிவிடும் என்பதால், இந்த 10 அரிய வகை பறவைகளும், மலேசிய நாட்டிற்கே, விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டது."

Continues below advertisement

அதிகாரிகள் சோதனை

மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு, இன்று காலை வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்கத்துறை, ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள் கண்காணித்துக் கொண்டு இருந்தனர். 

அப்போது சென்னையைச் சேர்ந்த என்ற ரஹ்மத் (34) என்பவர் உட்பட, 3 பேர், ஒரு குழுவாக, சுற்றுலா பயணி விசாவில், மலேசியா நாட்டிற்கு சென்று விட்டு, இந்த விமானத்தில் திருப்பி வந்தனர். அவர்கள் மீது ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகளுக்கு, சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்தப் பயணிகளை நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக தகவல்களை தெரிவித்துள்ளனர். இதை அடுத்து அவர்களுடைய உடமைகளை பரிசோதித்தனர். 

Continues below advertisement

பாலி மைனா

பயணியின் உடமைகளுக்குள், பிளாஸ்டிக் கூடைகளுக்குள், மலேசிய நாட்டின் அபூர்வ வகை பறவையான, "பாலி மைனா" என்ற வெள்ளை நிற 10 பறவைகள், உயிருடன் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அந்தப் பறவைகள், கூண்டுகளுக்குள் அடைக்கப்பட்டு, நீண்ட நேரம் பயணம் செய்து வந்ததால், கலைப்புடன், மயக்க நிலையில் இருந்தன. உடனடியாக அந்தப் பறவைகளை வெளியில் எடுத்து, அதன் மயக்கத்தை போக்கி, பறவைகளை காப்பாற்றினர்கள். 

அதோடு அந்த அபூர்வ வகை பறவைகளை கடத்தி வந்த பயணிகளிடம், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது இந்தப் பறவைகளை, சென்னைக்கு கொண்டு வந்து, இனவிருத்தி செய்ய வைத்து, இங்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வந்ததாகவும், இந்தப் பறவைகளை, லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வாங்குவார்கள் என்றும் தெரிவித்தனர். ஆனால் இந்தப் பறவைகளை மலேசிய நாட்டிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு, முறையான ஆவணங்கள் எதுவும், அவர்களிடம் இல்லை. அதோடு பறவைகளுக்கான மருத்துவ சான்றிதழ்களும் இல்லை என தெரியவந்தது.

திருப்பி அனுப்ப முடிவு

இந்தநிலையில் இந்தப் பறவைகளை, இந்தியாவுக்கும் அனுமதித்தால், இந்தப் பறவைகளின் மூலம், வெளிநாட்டு நோய் கிருமிகள், நமது நாட்டில் பரவி, பறவைகள், விலங்குகள் போன்ற உயிரினங்களுக்கும், மனித இனங்களுக்கும், வெளிநாட்டு நோய்கள் பரவும் ஆபத்து இருப்பதாக, மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்தனர். 

இதையடுத்து இந்த பறவைகள் அனைத்தையும், எந்த விமானத்தில் வந்ததோ, அந்த விமானத்திலேயே,வந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பவும் சுங்க அதிகாரிகள் முடிவு செய்தனர். அதோடு அதற்காக ஆகும் செலவுகள் அனைத்தையும், மலேசியாவில் இருந்து, இந்த பறவைகளை சட்ட விரோதமாக, கடத்திக் கொண்டு வந்த, 3 பயணிகளிடமும், அபராதம் வசூலிக்கவும் முடிவு செய்தனர். அதன்படி மலேசியாவுக்கு இன்று இரவு, சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லும், தனியார் பயணிகள் விமானத்தில், இந்த 10 பாலி மைனா பறவைகளையும், திருப்பி அனுப்ப முடிவு செய்து ஏற்பாடுகளை செய்தனர்.

தீவிர விசாரணை

இதற்கிடையே இந்த அரிய வகை மலேசிய பறவைகளை, முறையான ஆவணங்கள், மருத்துவ பரிசோதனைகள் இல்லாமல், இந்தியாவுக்கு கடத்திக் கொண்டு வந்த ரஹமத் உட்பட 3 பயணிகளையும், சுங்க அதிகாரிகள் சுங்க சட்டம் பிரிவின் கீழ், கைது செய்து மேலும் விசாரணை நடத்துவதோடு, இந்த அரிய வகை பறவைகள், யாருக்காக கடத்திக் கொண்டு வரப்பட்டது? என்பது பற்றியும், விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.