ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே, பனங்கிழங்கிலிருந்து 20-க்கும் மேற்பட்ட வகைவகையான தின்பண்டங்கள் செய்யப்பட்டு பொங்கல் பண்டிகை விற்பனைக்கு தயாராகி வருகிறது. இயற்கை உணவுப்பொருட்களில், பனை மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய பனங்கிழங்கு அதிக நார்ச்சத்து கொண்டதாகும். மலச்சிக்கலை அகற்றும் தன்மை கொண்டது. செயற்கையற்ற, கலப்படமில்லாத இயற்கையான உணவுப் பொருளான பனங்கிழங்கு மூலமாக பல்வேறு சுவையான தின்பண்டங்களை தயாரித்து விற்பனை செய்வதற்காக இந்தப் பெண்களால் தயாரிக்கப்பட்டு வருகிறது. 




தற்போது பனங்கிழங்கு சீசனாக உள்ளதால் பனங்கிழங்குகளை பெரிய பானையில் அவித்து அவற்றின் தோல்களை நீக்கி விட்டு வெயிலிலும் நிழலிலும் கிழங்குகளை உலர வைத்து ஒடிகிழங்கு பதத்திற்கு வந்தவுடன் மாவாக்கி கொள்கிறார்கள். பனங்கிழங்கு மாவைப் பயன்படுத்தி இனிப்புச் சுவைக்காக பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டு ஆகியவற்றை பயன்படுத்துகிறார்கள். மேலும், இவற்றிலிருந்து அல்வா, பனங்கிழங்கு சத்து மாவு, கார மிக்ஸர், மிட்டாய், பர்பி, கேக் உள்ளிட்டவைகளும்  பொங்கல் பண்டிகைக்காக தயாரிக்கப்பட்டு வருகிறது.




    


'பொங்கலும் பனங்கிழங்கும்'


பொங்கல் விழாவுக்குப் பனங்கிழங்கு பயன்படுத்துவது தமிழர் வழக்கமாகும். முதிர்ச்சியடைந்த பனை விதைகள் எவ்வித பயனைத் தராத போதிலும் அவற்றை முளைக்க வைத்து மாவுச்சத்து மிகுந்த முதல் இலையுடன் மூடிய  கிழங்கை  பெறலாம். பனங்கிழங்கை நன்கு கழுவி, இரண்டு விதமாய் வேகவைத்துச் சாப்பிடுவார்கள். தோலுடன் பானைக்குள் வைத்து, சிறிது நீர் ஊற்றி வேக வைத்துத் தோலை உரித்து எடுத்துவிட்டுக் கிழங்கை இரண்டாக வகிர்ந்து முறித்த நாரைப் பிரித்து விட்டுச் சாப்பிடுவார்கள். 





சில இடங்களில் தோலை உரித்து விட்டுச் சிறிது மஞ்சளை அரைத்துக் கிழங்கின் மீது தடவி உப்பு போட்டு பானைக்குள் வைத்து அவிக்கிறார்கள். பிறகு வெந்த கிழங்கை இரண்டாகப் பிரித்து வெய்யிலில் உலர்த்திச் சிறுசிறு துண்டுகளாகச் சேகரித்து வைத்து சிறு குழந்தைகளுக்கு தின்பண்டமாக அளிக்கிறார்கள். பனங்கிழங்கு மாவு, சத்துள்ள உணவு, உலர்ந்த கிழங்கு மாவாக அரைக்கப்பட்டு உணவுப் பொருளாக உட்கொள்ளப்படுகிறது. 






'பனங்கிழங்கிலிருந்து 25 வகை தின்பண்டங்கள்'


 


பனங்கிழங்கை பயன்படுத்தி மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட் களை செய்யமுடியும்,பனங்கிழங்கு பசியை தூண்ட வல்லது. இது சர்க்கரை நோய்க்கு சிறந்த மருந்தாகும். மேலும், மலச்சிக்கலை நீக்குவதோடு, உடலில் உள்ள கழிவுகளையும் பிரித்து வெளியேற்றுகிறது. பனங்கிழங்கில் இருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பல்வேறு வகையான உணவுப் பொருட்களை தயார் செய்யலாம். பனங்கிழங்கில் உள்ள நார்ச்சத்து, மாவுச்சத்து போன்றவையுடன் வெல்லம் இணையும்போது இரும்புச்சத்து கூடுதலாக கிடைக்கிறது. உடலுக்கு ஊட்டம் அளிக்கிறது. உடல் எடையை குறைத்து, உடலை வலுப்படுத்துகிறது.




இது குறித்து பனங்கிழங்கு தின்பண்டங்கள் தயாரிக்கும் பெண்களிடம் பேச்சுக்கொடுத்தோம்., அதற்கு அவர்கள், "பனங்கிழங்கை நன்றாக வேக வைக்க வேண்டும். பின்னர் அதை நன்கு உலர வைக்க வேண்டும். உலர்ந்தபின் அதை மாவாக்கி, அதனுடன் முந்திரி, ஏலக்காய், நெய் சேர்த்து வெல்லப் பாகு கலந்தால் சுவையான பனங் கிழங்கு அல்வா உள்பட 25 வகை சுவைமிகு தின்பண்டங்கள் தயாரிக்க முடியும்" என தித்திப்புடன் கூறினார்கள். அந்தப் பெண்கள் சொல்லும்போதே நமக்கு  நாக்கில் உமிழ்நீர்  ஊறியது.  உடனே சுவைக்க தோன்றியது. ஆனால், அதன் சுவையை அறிய பொங்கல் வரை காத்திருப்போமே….