கிராமங்களில், கிராம நடைமுறைகளை அல்லது கட்டுப்பாடுகளை மீறும் குடும்பங்கள், தனிநபர்களை, கிராம பஞ்சாயத்து தலைவர்களின் முடிவுப்படி, ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் பழக்கம் தமிழ்நாட்டில் இன்னமும் நடைமுறையில் உள்ளது. அவ்வாறு ஒதுக்கி வைக்கப்பட்டோருடன், அந்த கிராமத்தைச் சேர்ந்த யாரும் பேசவோ, பழகவோ கூடாது. காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் இப்பழக்கத்தால், பெரும்பாலும், பல குடும்பத்தினர் பாதிக்கப்படுகின்றனர்.

 

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா பிள்ளையார்குளம் கிராம பஞ்சாயத்தை சேர்ந்த 'புது குடியிருப்பு' கிராமத்தில் கடந்த 60 ஆண்டுகளாக வசித்து வருகிறார் ராசு. அவர் மனைவி மற்றும் மகன் உள்ளிட்ட குடும்பத்தார் அந்த ஊரில் விவசாய தொழில் செய்து வாழ்ந்து வருகின்றனர்.

அந்த கிராமத்தில் ஆடு வளர்ப்பு தொழில் அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. இதனால் கிராமத்தின் பொது காரியங்களுக்காக ஒவ்வொரு நபரிடமும் கணிசமான ஒரு தொகை ஆண்டுதோறும் வசூலிக்கப்படுகிறது. அந்த தொகையை ஒவ்வொரு திருவிழாவிற்கு பின்பும் வரவு செலவு கணக்கு பார்த்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் என ஒரு குறிப்பிட்ட தொகையை திரும்ப ஒப்படைக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.



 

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக குறிப்பிட்ட சில நபர்கள் கிராமப் பொறுப்பில் இருந்து கொண்டு முறையாக கணக்கு பார்க்கவில்லை என கூறப்படுகிறது. அவ்வாறு சரியாக கணக்கு வழக்கு பார்க்காததால் பொறுப்பில் உள்ள நபர்களிடம் ராசு குடும்பத்தார் தட்டி கேட்டதாகவும், இதனால் அந்த குடும்பத்தை தன்னிச்சையாக ஒரு சில தனிப்பட்ட நபர்களின் சுயநலத்திற்காக ஒதுக்கி வைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் அவருடைய இளைய மகன் திருமணத்தன்று பூஜை செய்ய கோவிலை திறக்க மறுத்ததாகவும், மேலும் அந்தப் பகுதியில் குடிநீர் எடுக்கச் செல்ல கூட அந்த குடும்பத்திற்கு அனுமதி இல்லை எனவும் வருத்தம் தெரிவிக்கின்றனர். இதனால் தங்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு, அந்த கிராமத்தில் இந்த குடும்பத்தினர் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

 

மேலும், இதுதொடர்பாக கடலாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் தெரிவித்ததோடு, சாயல்குடி காவல் நிலையத்திலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு அதிகாரிகள் அலட்சிய போக்குடன் நடந்து கொண்டதாக வேதனையை தெரிவிக்கின்றனர். எனவே தமிழக அரசு நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இந்த குடும்பத்தினரின் பாதிப்பை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து ஊரில் ஒருவராக அந்த குடும்பத்தினரையும் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.