ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் பணிமாற்றம் செய்யப்பட்டு நாகை மாவட்டத்திற்கு  சென்ற நிலையில், மாவட்டத்தின் 27-வது மாவட்ட ஆட்சியராக கடந்த மே 22 ந்தேதி பொறுப்பேற்றுக் கொண்டார் ஆட்சியர் விஷ்ணு சந்திரன். இவர் தனது உதவியாளர் மழையில் நனையாமல் இருக்க குடை பிடித்து அழைத்துச் சென்ற புகைப்படம் தற்போது சோசியல் மீடியாக்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.


தமிழகத்தில் நிர்வாக காரணங்களுக்காக அவ்வப்போது அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்யப்படுவது வழக்கம், இந்நிலையில் கடந்த மே மாதம் தமிழ்நாட்டில் உள்ள 16 மாவட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியர் மாற்றம் செய்யப்பட்டு தலைமை செயலகத்தில் இருந்து அறிவிப்பு வெளியானது.


இதையடுத்து, இதற்கு முன்‌ ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக  இருந்த ஜானிடாம் வர்கீஸ்  பணிமாற்றம் காரணத்தால் விடைபெற்று சென்றார். இதனைத் தொடர்ந்து, புதிய மாவட்ட ஆட்சியராக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விஷ்ணு சந்திரன்  பொறுப்பேற்றுக்கொண்டார்.




இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அடுத்த உத்திரகோசமங்கை ஊராட்சியில் கடந்த வாரம் மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு சந்திரன் பொதுமக்களை சந்தித்து கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து வரும் 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஆருத்ரா தரிசனம் திருவிழா  நடைபெற இருப்பதால் உத்தரகோசமங்கையில் உள்ள மங்கள நாதஸ்வாமி கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக வருவார்கள் என்பதால் அதற்கான  ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக கோவிலுக்கு சென்றார்.


பின்னர் ராமநாதபுரம் வருவதற்காக  மாவட்ட ஆட்சியர் புறப்பட்ட போது திடீரென மழை பெய்ததால் ஆட்சியருடன்  வந்துருந்த உதவியாளர் மாவட்ட ஆட்சியர் மழையில்  நனைந்து விடாமல் இருப்பதற்காக குடை பிடித்து கொண்டு உதவியாளர் நனைந்து படி வந்தார்.


இதனைப் பார்த்த ஆட்சியர் சட்றென்று அவர் பிடித்திருந்த குடையை பிடுங்கி உதவியாளர் தோளில் கை போட்டு கொண்டு உதவியாளரை குடை பிடித்து அழைத்து வந்தார்.


தன்னலம் கருதாமல் தனது உதவியாளர் மழையில் நனைந்து விடாமல் இருப்பதற்காக பாதுகாப்புடன் மாவட்ட ஆட்சியர் குடை பிடித்து அழைத்து வந்தது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.