தமிழகம் உட்பட 15 மாநிலங்களில் வரும் ஜூன் 10ஆம் தேதி மாநிலங்கள் அவை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் காலியாகும் 6 இடங்கள் உட்பட 57 இடங்களுக்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்ட உள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. திமுகவைச் சேர்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், அதிமுகவைச் சேர்ந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், நவநீதிகிருஷ்ணன், ஏ.விஜயகுமார் ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஜூன் 29ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. 


சட்டப்பேரவையில் இருக்கும் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை அடிப்படையில், திமுகவுக்கு 4 இடங்களும், அதிமுகவுக்கு 2 இடங்களும் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த காலி இடங்களில் கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா, அல்லது பிரதான கட்சிகளே வேட்பாளர்களை அறிவித்து போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ராஜ்யசபாவில் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. திமுகவை பொறுத்தவரை தற்போது பதவிக்காலம் முடியும் உறுப்பினர்களைத் தவிர கூடுதலாகவே ஒரு உறுப்பினரை தேர்வு செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. குடியரசுத் தலைவர், துணைக் குடியரசு தலைவர் தேர்தல் மாநிலங்களவை உறுப்பினர்களின் அடிப்படையில் வாக்குகள் நிர்ணயம் செய்யப்படும் என்பதால் இந்த தேர்தல் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 


வரும் 24ஆம் தேதி தொடங்கும் வேட்புமனுத்தாக்கல், 31ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப்பெற ஜூன் 03ஆம் தேதி கடைசிநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 10ஆம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவடைகிறது. அன்று மாலையே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.