Rajya Sabha: நாடாளுமன்றம் செல்லும் தவெக.. கிடைத்த சூப்பர் வாய்ப்பு.. விஜய் முடிவு என்ன?
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற சி.வி.சண்முகம், தனது மாநிலங்களவை பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காலியாக உள்ள அந்த இடம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு கிடைக்கவுள்ளது.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் காலியாக உள்ள 2 இடங்களுக்கும் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் ஒரு இடம் காலியாக உள்ள நிலையில் தவெக சார்பில் ஒருவர் எம்பி.,யாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
மாநிலங்களவை எம்.பி., தேர்தல்
அதன்படி வெளியாகியுள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி மகாராஷ்ராவில் சுனேந்திர அஜித் பவார் மற்றும் தமிழ்நாட்டில் சி.வி.சண்முகம் ஆகிய இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் காலியாக 2 இடங்களுக்கும் தேர்தல் அறிவிக்கப்படுகிறது. இதுதொடர்பாக ஜூன் 1 முதல் 8ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறும். ஜூன் 9ம் தேதி வேட்புமனு மீது பரிசீலனையும், ஜூன் 11ம் தேதி வேட்புமனுவை திரும்ப பெற கடைசி நாளாகும். ஜூன் 18ம் தேதி தேர்தல் நடைபெறும். அன்று மாலை 5 மணிக்கு முடிவுகள் தெரிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. மாநிலங்களவை உறுப்பினர்களை அந்தந்த மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்வார்கள். மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும்.
தமிழ்நாட்டில் காலியான எம்பி பதவி
இதனிடையே கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் விழுப்புரத்தில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தோல்வியடைந்தார். இந்த நிலையில் 2022ம் ஆண்டு மாநிலங்களவை எம்பி பதவி அதிமுகவுக்கு கிடைத்த நிலையில் அதில் சி.வி.சண்முகம் தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றார். இந்த நிலையில் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு சி.வி.சண்முகம் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து அவர் தனது மாநிலங்களை எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காலியாக உள்ள அந்த ஒரு இடத்துக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் செல்லும் தவெக
இந்த நிலையில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சட்டமன்ற எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை அடிப்படையில் கட்சிகளுக்கு மாநிலங்களவை இடம் ஒதுக்கப்படுகிறது. அந்த வகையில் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்திற்கு கிட்டதட்ட மாநிலங்களவை இடம் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. இதனால் சட்டமன்றம் தொடர்ந்து நாடாளுமன்றத்திலும் அக்கட்சி கால் பதிக்கவுள்ளது. அந்த ஒரு இடத்தில் விஜய் யாரை தேர்வு செய்யப்போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. லயோலா மணி பெயர் பலமாக அடிபடுகிறது. அதேசமயம் காங்கிரஸூக்கு அந்த ஒரு இடம் ஒதுக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் அதிமுகவுக்கான இடம் காலியாகி உள்ளதால் அதனை அவர்களுக்கே முதலமைச்சர் விஜய் விட்டுக்கொடுக்கப் போகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏற்கனவே அதிமுகவில் ஒரு தரப்பு தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு கொடுத்து வரும் நிலையில் விஜயின் முடிவு என்னவாக இருக்கப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்





















