இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தது தொடர்பாக நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் கடந்த 1991ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர்.  32  ஆண்டுகளாக  அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில்,  கடந்த மே மாதம் பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 


சிறப்பு முகாமில் தங்க வைப்பு


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக சிறையில் அடைக்கப்பட்ட நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோரும்,  தங்களை விடுதலை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் தனித்தனியே மனுத்தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம், பேரறிவாளனுக்கு அளித்த தீர்ப்பே, மற்ற 6 பேருக்கும் பொருந்தும் என தீர்ப்பளிக்கப்பட்டது. அதனடிப்படையில், நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் ரவிச்சந்திரன். அவர்களில், முருகன், சாந்தன், ஜெயக்குமார் மற்றும் ராபர்ட் பயாஸ் ஆகியோர் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால், நான்கு பேரும் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


நளினி செய்தியாளர் சந்திப்பு


இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நளினி, தங்களது விடுதலைக்காக உறுதுணையாக இருந்த மத்திய, மாநில அரசுகள் மற்றும் போராட்டங்களை முன்னெடுத்த பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்தார். தனக்காக போராடியவர்கள் அனைவரையும் சந்திக்க முடியுமா என தெரியவில்லை என்றும், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோருக்கும் நன்றி கூறினார். தமிழக அரசு பரோல் வழங்கியதன் காரணமாகவே, விடுதலைக்கான பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுக்க முடிந்ததாக மகிழ்ச்சி தெரிவித்தார்.


முதல் நாள் முதலே நம்பிக்கையுடன் இருந்தேன் - நளினி


கைதான நாள் முதலே நான் விடுதலை ஆகிவிடுவேன் என நம்பியதாகவும், ஆனால் தனது முயற்சிகளுக்கு தொடர்ந்து பல அடிகள் விழுந்ததன் காரணமாக, வாழ்க்கையையே முடித்துக்கொள்ளலாம் என்ற பல சூழல்களை சிறையில் தான் எதிர்கொண்டதாகவும் கூறினார். ஆனாலும், வழக்கறிஞர்கள் தனக்கு தொடர்ந்து ஆதரவாகவும், உறுதுணையாகவும் இருந்ததால் வழக்கில் தொடர்ந்து போராட முடிந்ததாக கூறினார். 


தனக்கு தூக்கு தண்டனை ரத்து ஆன நேரத்தை காட்டிலும், ராபர்ட் பயஸ் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோரின் தூக்கு தண்டனை ரத்தானபோது தான் மிகவும்  மகிழ்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்தார். இலங்கை தமிழரான தனது கணவர் முருகனுக்கு உலகின் பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும்,  அதில் ஏதேனும் ஒரு நாட்டில் அவர் குடியேறுவார் என்றும் நளினி கூறினார். அவசர விசா மூலம் கணவர் முருகன் உடன் சேர்ந்து லண்டன் சென்று மகளை சந்திக்க விரும்புவதாகவும், முகாமில் உள்ள தனது கணவரை விரைவில் தன்னுடன் விரைந்து சேர்க்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.


கணவருடன் சேர்ந்து மகளை சந்திக்க விருப்பம் - நளினி


சிறையில் இருந்தாலும் மனதளவில் தனது மகள் மற்றும் கணவருடன் இருந்ததாகவும், அவர்களுடன் வாழ்ந்த மாதிரியான அந்த அனுபவம் இனி உண்மையில் நடக்கப்போவதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார். கலாம் அய்யா அவர்களின் நினைவிடத்திற்கு செல்ல வேண்டும் என்பது போன்ற பல ஆசைகள் இருப்பதாகவும், ராகுல் காந்தி விருப்பம் தெரிவித்தால் அவரை சந்திக்க தயார் எனவும் நளினி தெரிவித்தார்.