முதலமைச்சர் முக ஸ்டாலின் நாளை தனது 70வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள திமுக தொண்டர்கள், பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் என அனைவரும் இன்று முதலே தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றன. 






இந்தநிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு வீடியோ வாயிலாக தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில்,” வணக்கம்! என்னுடைய இனிய நண்பர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் நீண்டநாள் நல்ல ஆரோக்கியத்துடன் மன நிம்மதியுடன் மக்கள் சேவை செய்ய வேண்டும் என்று அவருடைய 70வது பிறந்தநாளில் மனதார வாழ்த்துகிறேன்.” என தெரிவித்தார். 


முன்னதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு “எங்கள் முதல்வர் எங்கள் பெருமை” என்ற தலைப்பில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் புகைப்பட கண்காட்சி தொடங்கியது. சென்னை பிராட்வேயில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் கண்காட்சி நடக்கிறது. இதனை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்.  இதன் செய்தியாளர் சந்திப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் இன்றே பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். 


மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதாரண  திமுக தொண்டராக தன் அரசியல் வாழ்க்கையை தொடங்கி , இளைஞர் அணிச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், மேயர், அமைச்சர், துணை முதலமைச்சர், தற்போது முதலமைச்சர் எனப் படிப்படியாக வளர்ந்து தனது திறமையை மட்டுமல்ல பொறுமையையும் நிரூபித்திருக்கிறார். எங்கள் நட்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது என்பதை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உணர்த்தியிருக்கிறோம்.