வெற்றி துரைசாமி மறைவுக்கு, அவரது தந்தையான சைதை துரைசாமியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் நடிகர் ரஜினிகாந்த்.


சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி தனது நண்பருடன் இமாச்சல பிரதேசத்திற்கு சென்றார்.  அப்போது, கடந்த 4 ஆம் தேதி மலைப்பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த காரானது 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்துசட்லஜ் நதியில் விழுந்தது


இதையடுத்து, கார் ஓட்டுநர் டென்சின் இறந்தார். நண்பர் கோபிநாத் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். காணாமல் போன வெற்றி துரைசாமியை தீவிரமாக தேடி வந்தனர். இதனிடையே, கடந்த 9 நாட்களுக்கு பின்னர் வெற்றி துரைசாமியின் உடல்  விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் சடலமாக மீட்கப்பட்டது.  இதனையடுத்து வெற்றி துரைசாமியின் உடல் விமானம் மூலம் நேற்று (பிப்ரவரி 13) மாலை சென்னை கொண்டு வரப்பட்டு நல்லட்டக்கம் செய்யப்பட்டது. 


இந்நிலையில், இன்று சைதை துரைசாமி குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் நடிகர் ரஜினிகாந்த். 


Also Read: Vetri Duraisamy: மறைந்த உயிர் நண்பன்! வெற்றி துரைசாமி குடும்பத்துக்கு நேரில் சென்று அஜித் ஆறுதல்!


அரசியல் தலைவர்கள் அஞ்சலி:




நேற்று, சென்னை சிஐடி நகரில் உள்ள இல்லத்தில் வெற்றி துரைசாமியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.வெற்றி துரைசாமி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று  மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோரும் சென்று அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்திய பின்னர் சைதை துரைசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.


வெற்றி துரைசாமி உடலுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் எம்.பி.திருநாவுக்கரசர்,  சசிகலா, மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் மற்றும் திரைப்பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்கள்.