சென்னை, செங்கல்பட்டு, கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு:
நேற்று (22.11.2022) மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் தெற்கு ஆந்திர மற்றும் வட தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மாலை காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து இன்று (23.11.2022) காலை தெற்கு ஆந்திர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவுகிறது.
இதன் காரணமாக,
23.11.2022: வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
24.11.2022 முதல் 27.11.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
சோழவரம் (திருவள்ளூர்), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்) தலா 3, சென்னை கலெக்டர் அலுவலகம் (சென்னை), கலசப்பாக்கம் (திருவண்ணாமலை), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்) தலா 2, கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை), பொன்னேரி (திருவள்ளூர்), ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்), பூண்டி (திருவள்ளூர்), தண்டையார்பேட்டை (சென்னை), ஆவடி (திருவள்ளூர்), கலவை AWS (இராணிப்பேட்டை), சென்னை நுங்கம்பாக்கம், TNAU ஏதாப்பூர் (சேலம்), MRC நகர் ARG (சென்னை) தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.