குறைந்தது வெப்பம்- கொட்டப்போகுது மழை
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் கடந்த சில மாதங்களாக உச்சத்தை தொட்டது.பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவானது. இதனால் வீடுகளில் இருந்து வெளியே வரவே மக்கள் அச்சப்படும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளாவை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளில் மழையானது வெளுத்து வாங்கியது. இதே போல தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் மாலை நேரத்தில் மழை பெய்தது. இந்த நிலையில் வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வட தமிழகத்தில் மழையானது தீவிரம் அடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
அந்த வகையில், வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நேற்று நிலவிய மேலடுக்கு சுழற்சி தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. அந்த வகையில், இன்று காலை நிலவரப்படி வடக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக இந்திய மாநில ஆய்வுகள் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மாலை நேரங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. இனியும் மழைக்கான வாய்ப்பு அதிகரிக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
எங்கெல்லாம் மழை வாய்ப்பு
நாளை மறுதினம் (14-08-2026) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல அடுத்த இரண்டு தினங்களுக்கும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வங்ககடல் பகுதிகள்- மீனவர்களுக்கு எச்சரிக்கை
13-08-2026 மற்றும் 14-08-2026: தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
