தஞ்சை கும்பகோணம் வழியாக சென்னைக்கு வந்தே பாரத் ரயிலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரெயில்வே உபயோகிப்பாளர் சங்கம் மற்றும் வியாபாரிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தஞ்சை வழியாக சென்னைக்கு இயங்கி வந்த ரயில்கள் தஞ்சை - கும்பகோணம் வழியாக சென்னைக்கு முன்பு பல ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது திருச்சி வழியாக இயக்கப்பட்டு வருகிறது. சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் தஞ்சை - கும்பகோணம் வழியாக சென்னை வரை இயக்கப்படுகிறது.  தஞ்சை - விழுப்புரம் இடையேயான ரெயில் பாதை மிகவும் பழமையானது. 


முக்கிய ரெயில் நிலையங்கள் அமைந்துள்ளது  இப்பாதையில் தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர் உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்கள் அமைந்துள்ளது. தஞ்சாவூர்-விழுப்புரம் இடையே ஒற்றை வழி  ரெயில் பாதை அமைந்துள்ளதால் இப்பாதையில் ரெயில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.


தஞ்சையில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் சோழன் விரைவு வண்டி மட்டுமே இரு மார்க்கங்களிலும் இயக்கப்பட்டு வருகிறது.  இந்த ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் எண்ணிக்கை அதிகளவு இருப்பதால் எப்போதும் அனைத்து பெட்டியிலும் பயணிகள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். 


வார இறுதி நாட்களிலும் பண்டிகை காலங்களிலும் இடைப்பட்ட ரெயில் நிலையங்களில்  சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இடம் கிடைப்பது அரிதாக இருக்கும். தஞ்சையில் இருந்து விழுப்புரம் வரை பகல் நேரத்தில் தினசரி  இயங்கும்  ஒரே ரெயில் என்பதால் இடைப்பட்ட ரெயில் நிலையங்களுக்கு செல்லவும் பயணிகள் இந்த ரெயிலையே அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். எனவே தஞ்சாவூர் - சென்னை இடையே பகல் நேர இன்டர்சிட்டி விரைவு ரெயில் இயக்கப்பட வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட  ரெயில்வே உபயோகிப்பாளர்கள் சங்கமும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். 


வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும்:


தற்போது இந்தியா முழுவதும் பகல் நேரத்தில் இயக்கப்படும் இன்டர்சிட்டி ரெயில்களுக்கு மாற்றாக வந்தே பாரத் ரெயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.  சென்னையில் இருந்து கோயம்புத்தூர், நாகர்கோவில், திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களுக்கு  வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.  பல கூடுதல் வசதிகளுடன் அதிவேகமாகவும்  இந்த ரெயில்கள் இயக்கப்படுவதால் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


ரயில்வே உபயோகிப்பாளர்கள் கோரிக்கை மனு:


தஞ்சையில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டி  தஞ்சாவூர் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர்கள் சங்க செயலாளர் ஏ. கிரி, தென்னக ரயில்வேக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். 


அதில் ”தஞ்சையில் இருந்து சென்னைக்கு இன்டர்சிட்டி விரைவு ரெயில் இயக்க பல ஆண்டுகளாக பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சென்னை செல்லும் சோழன் விரைவு ரெயிலில் கூட்டம் அதிகமாக உள்ளது.  திருச்சி ரெயில்வே கோட்டத்தில் கடந்த ஆண்டு டிக்கெட் வருமான தரப்பட்டியலில் முன் வரிசையில் உள்ள தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை உள்ளிட்ட ரெயில் நிலையங்கள் வழியாக இயக்கப்படும் அனைத்து ரெயில்களிலும் அதிக பயணிகள்  பயன்பாடு உள்ளது. 


நிரம்பி வழியும் முன்பதிவு: 


குறிப்பாக குளிர்சாதன பெட்டிகளில் முன்பதிவு எப்போதும் நிரம்பி காணப்படுகிறது. எனவே தஞ்சாவூர் - சென்னை எழும்பூர் இடையே கும்பகோணம், மயிலாடுதுறை வழியாக வந்தே பாரத்  ரெயில் இயக்கப்பட்டால் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். 


எனவே தஞ்சை சென்னை இடையே வந்தே பாரத் சிறப்பு ரயிலை வாரம் மும்முறை இயக்க வேண்டும்” என அந்த   மனுவில் கோரப்பட்டுள்ளது. இதேபோல் தஞ்சையிலிருந்து கும்பகோணம், மயிலாடுதுறை வழியாக சென்னைக்கு வந்தே பாரத் ரெயிலை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டால் சென்னைக்கு செல்லும் பயண நேரமும் குறையும். 


இதனால் வியாபாரிகள் குறித்த நேரத்திற்குள் சென்னைக்கு சென்று விட்டு முன்னதாகவே திரும்ப இயலும். எனவே இது குறித்து ரெயில்வே நிர்வாகம் விரைந்து பரிசீலனை செய்து வந்தே பாரத் ரெயிலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளனர்.