இந்தியாவின் வளமான பாரம்பரியம் உலகிற்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கிறது என காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி புகழாரம் சூட்டியுள்ளார்.
இரும்பு யுகம் தமிழ் மண்ணில் தொடங்கியது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “மிகுந்த பெருமையுடனும், ஒப்பிடமுடியாத திருப்தியுடனும், நான் உலகிற்கு அறிவிக்கிறேன்.
இரும்பு யுகம் தமிழ் மண்ணில் தொடங்கியது. உலகப் புகழ்பெற்ற நிறுவனங்களின் முடிவுகளின் அடிப்படையில், தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு கிமு 4 ஆம் மில்லினியத்தின் தொடக்கத்தில் இருந்து தொடங்குகிறது. இது தென்னிந்தியாவில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பு பயன்பாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது என்பதை தெளிவுபடுத்துகிறது.
நமது பண்டைய இலக்கியங்களில் எழுதப்பட்டவை இப்போது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட வரலாறாக மாறி வருகின்றன. நமது திராவிட அரசாங்கத்தின் கவனமான முயற்சிகளுக்கு நன்றி.
இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு இனி தமிழ்நாட்டை கவனிக்காமல் இருக்க முடியாது. உண்மையில், அது இங்கே தொடங்க வேண்டும்!” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதை மேற்கோள் காட்டிய காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி, “இந்தியாவின் வளமான பாரம்பரியம் உலகிற்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கிறது. தமிழ்நாட்டில் சமீபத்திய தொல்பொருள் கண்டுபிடிப்புகள் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு இருந்ததை உறுதிபடுத்தியுள்ளது. இது இரும்பு யுகத்தில் இந்தியாவின் ஆரம்பகால முன்னேற்றங்களைக் காட்டுகிறது.
தமிழ்நாட்டின் பங்களிப்புகள், நமது நாடு முழுவதும் எண்ணற்ற மைல்கற்களுடன், இந்தியாவின் புதுமை மற்றும் ஒற்றுமையை பிரதிபலிக்கின்றன.
ஒவ்வொரு மாநிலத்திலும், சமூகத்திலும், குரலிலும் செழித்து வளரும் இந்தியாவின் உணர்வைக் கொண்டாடுவோம்.” என புகழாரம் சூட்டியுள்ளார்.