பப்ஜி என்ற இணையதள விளையாட்டில் ஆபாசமாக பேசி யூ டியூப்பில் வீடியோ பதிவேற்றம் செய்ததாகவும், பப்ஜி விளையாட்டு மூலம் பண மோசடியில் ஈடுபட்டதாகவும் பப்ஜி மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகாவை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரது மனைவி கிருத்திகாவை மட்டும் போலீசார் ஜாமீனில் விடுவித்தனர். மதன் தற்போது சிறையில் உள்ளார். அவர் மீது குண்டர் சட்டம் பதியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சிறையில் இருக்கும் பப்ஜி மதனுக்கு சொகுசு வசதிகள் செய்து தர சிறைத் துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் மதனின் மனைவி சிறைத்துறை காவலர் ஒருவருக்கு 25 ஆயிரம் ரூபாய் கூகுள் பே மூலம் பணப்பரிவர்த்தனை செய்ததாக கூறப்படுகிறது. தற்போது வெளியாகியுள்ள ஆடியோவின் உண்மை தன்மை குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக சிறை துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மதன் மற்றும் அவரது மனைவி மீதான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இந்த குற்றப்பத்திரிகையில் மொத்தம் 600 பக்கங்கள் இடம்பெற்றுள்ளது. மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகா மீதான வழக்கில் மொத்தம் 32 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பப்ஜி மதன் மீது மொத்தம் 150-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தநிலையில், மொத்தம் 32 பேர் மட்டும் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தனர்.
இதுமட்டுமின்றி, கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு உதவி செய்வதாக கூறி ரூபாய் 2 ஆயிரத்து 848 நபர்களிடம் ரூபாய் 2 கோடியே 89 லட்சம் ரூபாய் பணமோசடி செய்ததாகவும் காவல்துறை தரப்பில் மதன் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் மதனின் மனைவி கிருத்திகா மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் இந்த வழக்கில் 2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். முன்னதாக, பப்ஜி விளையாட்டில் சிறப்பாக ஆடிவந்த மதன் மற்ற சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும் பப்ஜி விளையாட்டை கற்றுத் தந்துள்ளனர். பின்னர், அப்போது பெண்களிடமும், சிறுவர்களிடமும் மிகவும் ஆபாசமாக பேசியுள்ளார். அந்த ஆபாச பேச்சை தனது யூ டியூப் தொலைக்காட்சியிலும் வீடியோவாக தொடர்ச்சியாக வெளியிட்டு வந்துள்ளார். இதையடுத்து, பலரும் மதனுக்கு கண்டனங்களை தெரிவித்தனர். சிலர் மதனுக்கு எதிராக காவல் நிலையங்களில் புகார் அளித்தனர்.முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கும் பலரும் மதன் மீது புகார் தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார் மதனை கைது செய்தனர்.
மேலும் படிக்க: சரியான கருத்துக்களை எடுத்துரைக்காததே ஆளுநர் மசோதாவை திருப்பியனுப்ப காரணம்: ஓபிஎஸ்