Bengaluru Pugazhendi: கலையப்போகும் அடுத்த அதிமுக.. தவெகவில் இணையும் பெங்களூரு புகழேந்தி!
புதுச்சேரி ரிசார்ட்டுக்கு அதிமுக எம்எல்ஏக்களை கூட்டிச்சென்றது முதல் தற்போது வரை எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகள் மீண்டும் தான் எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் என்பதில் இருக்கிறது என புகழேந்தி தெரிவித்துள்ளார்.

புரட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் புகழேந்தி விரைவில் தவெகவில் இணையப் போவதை சூசகமாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம்
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து தமிழக வெற்றிக் கழகம் பொறுப்பேற்றுள்ளது. முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வரும் நிலையில் இதுவரை தமிழ்நாடு அரசியல் காணாத மாற்றங்களை கண்டு வருகிறது. இந்த சூழலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 4 எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். அதுமட்டுமல்லாமல் முன்னாள் அதிமுக நிர்வாகிகள் பலரும் அடுத்தடுத்து தவெகவில் இணைந்து வருகின்றனர்.
தவெகவில் இணையும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்
இந்த சூழலில் புரட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பெங்களூரு புகழேந்தி நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரும், தவெக பொதுச்செயலாளருமான ஆனந்தை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முதலமைச்சர் விஜயின் தலைமையை ஏற்று செயல்பட எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை என கூறினார். மேலும் நேரம் வரும்போது அதை பற்றி தெரிவிக்கிறேன்” என்றும் சூசகமாக தெரிவித்துள்ளார். இதனால் புகழேந்தி தவெகவில் இணைவது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது.
தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பற்றி பேசிய அவர், “நான் கேட்பதெல்லாம் ஒன்று தான். அதிமுக பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டான திமுகவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சி அமைக்க முயற்சித்தது என்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளாரா என்று கேள்வி எழுப்பினார். அவர் இப்போதும் கூட அந்த எண்ணத்தில் தான் செயல்பட்டு, தொடர்ந்து அதற்கான பணிகளில் ஈடுபட்டுக் கொண்டுள்ளார்.
தேர்தல் முடிவுக்குப் பின்னர் பாண்டிச்சேரி ரிசார்ட்டுக்கு அதிமுக எம்எல்ஏக்களை கூட்டிச்சென்றது முதல் தற்போது வரை எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகள் அனைத்தும் மீண்டும் தான் எப்படியாவது ஆட்சிக்கு வந்து விட வேண்டும் என்பதில் தான் இருக்கிறது. அதேபோல் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி, பிரிந்து சென்ற அதிமுகவினர் ஒன்றிணைய வேண்டும். அதற்கான முயற்சிகளை நாங்கள் மேற்கொள்வோம் என கூறினார். தற்போது எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து தங்களுக்குள் கருத்து வேறுபாடு இல்லை என சொல்கிறார். இதெல்லாம் பார்க்கும்போது எஸ்.பி.வேலுமணி நடத்தியது நாடகம் என்பது அம்பலமாகியுள்ளது.
இதையும் படிங்க: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
எந்த காலத்திலும் தன்னுடைய முயற்சியில் எடப்பாடி பழனிசாமி வெற்றிப் பெற மாட்டார். இந்த ஆட்சிக்கு ஆறு மாதம் வரை எந்தவித தொந்தரவும் கொடுக்காமல் இருப்பது எதிர்க்கட்சிகளுக்கு நல்லது. தினம் ஒரு பிரச்னை என்றால் அதற்கு தவெக தான் காரணம் என சொல்லி கிளப்பி விடுகிறார்கள். விஜய் தலைமையை ஏற்றுக் கொண்டு அதிமுகவிலிருந்து பல எம்எல்ஏக்கள் தமிழக வெற்றி கழகத்தில் சேர உள்ளார்கள். அதனை நாம் பார்க்கப் போகிறோம் என பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக திகழ்ந்த புகழேந்தி, ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் உரிய இடம் கிடைக்காமல் திண்டாடி வந்தார். ஓபிஎஸ்க்கு ஆதரவாக செயல்பட்ட அவர், கடந்த மார்ச் மாதம் புரட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி அதிர்ச்சி கொடுத்தார். இந்த தேர்தலில் அக்கட்சி போட்டியிட்டாமல் திமுகவுக்கு ஆதரவு கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Before You Go
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை
ட்ரெண்டிங் செய்திகள்





















