சேலம் மாநகர் கோட்டை பகுதியில் உள்ள கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பயிலும் மாணவிகளின் அடிப்படை வசதியான குடிநீர், கழிவறை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு மாணவிகளின் பயன்பாட்டிற்கு உள்ளது.
ஆனால் போதிய பராமரிப்பு இல்லாமல் கழிவறையில் மாணவிகள் பயன்படுத்திய நாப்கின், சுகாதாரமற்ற முறையில் கிடப்பதால் தொற்றுநோய் ஏற்படும் அபாய நிலை உள்ளது. மேலும் குடிநீர் தொட்டியில் சுத்தப்படுத்தாமல் புழுக்கள், பூச்சிகள், குப்பைகள் கிடப்பதால் குடிநீர் மாசடைந்து காணப்படுகிறது.
ஆனால் பள்ளி நிர்வாகம் குடிநீர் தொட்டியை பல மாதங்களாக தூய்மைப்படுத்தாமல் மாணவிகளுக்கு மாசடைந்த குடிநீரை வழங்கி வருகிறது. இதனால் இந்த குடிநீரைப் பருகும் மாணவிகளின் உடல் நிலை பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று உணவு இடைவேளையின்போது தண்ணீர் பருகச் சென்ற மாணவிகள் குடிநீரில் புழுக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
அப்போது இரண்டு மாணவிகளையும் முட்டி போட வைத்து தண்டனை கொடுத்ததாகவும் இதுகுறித்து வெளியில் யாரிடமாவது கூறினால் டிசி கொடுத்து விடுவோம் என தலைமை ஆசிரியர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
பின்னர் இதுகுறித்து பள்ளி மாணவிகள் கூறும்போது, "கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தண்ணீர்த் தொட்டி சுத்தம் செய்யப்படாமல், மாசடைந்து உள்ளது. இந்த தண்ணீரை குடிக்கும் மாணவிகளுக்கு சளி, காய்ச்சல் போன்ற பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது’’ என்று புகார் தெரிவித்தனர்.
எனவே சேலம் மாவட்ட பள்ளிக்கல்வித் துறை மற்றும் பள்ளி நிர்வாகம் உடனடியாக குடிநீர் தொட்டியை சுத்தம் செய்வதோடு இனிவரும் காலங்களில் இது போன்ற நடக்காமல் இருக்க முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கழிவறைகளையும் முறையாக சுத்தம் செய்து சுகாதாரமாக பயன்படுத்துவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
பள்ளியில் வைக்கப்பட்டிருந்த குடிநீர்த் தொட்டியில் சுகாதாரமற்ற முறையில் பூச்சிப் புழுக்கள் இருந்த சம்பவம் பெற்றோர்கள் மற்றும் மாணவிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே அரசு பொதுத் தேர்வின்போது கேள்வித் தாள் தைக்கும் பணியில் மாணவிகளை ஈடுபடுத்தியதற்காக தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, மீண்டும் பணியில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.