புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் காரைக்கால் கிளையில் படிக்கும் 24 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், காலாப்பட்டு பாஜக எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம் போலீஸ் அதிகாரிகளை கடுமையாக பேசும் வீடியோ வெளியாகி உள்ளது.

Continues below advertisement

போலீஸ் அதிகாரிகளை கடுமையாக பேசும் எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம்

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் காரைக்கால் கிளையில் படிக்கும் மாணவியின் ஆடியோ தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், ஒரு முதுகலை மாணவி துறை சார்ந்த பேராசிரியர் ஒருவர் தன்னை அடிக்கடி ஆபாசமாகப் பேசுவதாகவும், வாட்ஸ்அப் மூலம் நிர்வாணப் புகைப்படங்களை அனுப்பும்படி வற்புறுத்துவதாகவும் கூறியுள்ளார். மேலும், அவர் இதை மறுத்தால் இன்டெர்னல் internal மதிப்பெண்களை வழங்க மாட்டேன் என மிரட்டுவதாகவும் அந்த ஆடியோவில் மாணவி அழுதபடி கூறியுள்ளார். பெற்றோருக்குத் தெரிந்தால் தன்னுடைய படிப்பை நிறுத்திவிடுவார்கள் என்ற அச்சத்தால், நீண்டநாள் துன்பத்துடன் வாழ்ந்ததாகவும் அந்த மாணவி கூறியுள்ளார்.

பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் துன்புறுத்தல்

இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன், அந்த ஆடியோ ஆதாரங்களுடன் சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதனிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் துன்புறுத்தல் குறித்த பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. கடந்த 2015-ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியக்குழு விதிகளின்படி, அமைக்கப்பட்ட உள் புகார் விசாரணைக் குழு நியாயமான நடவடிக்கை எடுக்கவில்லை என மாணவர்கள் குற்றஞ்சாட்டினர்.

Continues below advertisement

பாலியல் குற்றச்சாட்டுகள்

இதனால், அந்தக் குழுவை மறுசீரமைக்கக் கோரி மாணவ, மாணவிகள் இணைந்து போராட்டம் தொடங்கினர். தொடர்ந்து துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, கண்டனப் பதாகைகளை ஏந்தியபடி, பாலியல் குற்றச்சாட்டுகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

போராட்டம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலை முதல் இரவிலும் தொடர்ந்தது. இதனால் வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவியது. நிலைமை கட்டுக்குள் வர, போலீசார் பல்கலைக்கழகத்திற்குள் வரவழைக்கப்பட்டனர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட பத்து மாணவ பிரதிநிதிகள் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களை போலீசார் இழுத்து அடித்தபடி வேனில் ஏற்றியதாக மாணவர்கள் குற்றம் சாட்டினர். இதனால், மற்ற மாணவர்கள் மறித்து மறுபடியும் போராட்டம் தொடங்கினர். தற்போது, அவர்கள் விடுதிலேயே இருந்து போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

ஜெயில் கைதிகளை போல் நடத்துகிறீர்கள்

24 மாணவர்களை கைது செய்த நிலையில், காலாப்பட்டு பாஜக எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம், காவல்துறையினரிடம் ஆவேசமாக பேசும் வீடியோ வெளியாகி உள்ளது. அதில், மாணவர்களை எட்டி உதைக்கிறீர்கள். இது காவல் நிலையமா இல்லை சிறை சாலையா, அவர்கள் கொலை செய்தவர்கள் கிடையாது அவர்களை எட்டி உதைக்கிறார்கள். வித்த காட்டுகிறீர்கள் என்று ஆவேசமாக பேசினார்.

இங்கு நான் தான் எம்.எல்.ஏ இதுதான் ஒரு லிமிட்டு சொல்லிட்டேன். காவல்துறையினர் உங்களது வேலையை மட்டும் பாருங்கள். தேவை இல்லாமல் அனாவசிய வேலைகளில் காவல்துறையினர் ஈடுபடுகின்றனர். கேட்பதற்கு யாரும் இல்லை என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். ஜெயில் கைதிகளை போல் நடத்துகிறீர்கள். அவர்கள் கல்லூரி படிக்கும் மாணவர்கள். கொலை செய்யும் குற்றவாளிக்கு ராஜ மரியாதை தருகிறீர்கள். ஆனால் குற்றத்தை தட்டிக் கேட்கும் மாணவர்களை தாக்குகின்றீர்கள்.

பாண்டிச்சேரி காவல் துறையின் மானம் பறக்கிறது

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பாண்டிச்சேரி காவல் துறையின் மானம் பறக்கிறது என்று கூறினார். மாணவர்களை ஷூ காலோடு தாக்குகிறார்கள் இதை குற்றவாளிகளிடம் செய்வீர்களா என்று கேள்வி எழுப்பினர். மாணவர்களுக்கு சரி, தவறு என்பதை காவல்துறையினர் தான் புரிய வைக்க வேண்டும். அதுதான் நம்முடைய கடமை. அதை விட்டுவிட்டு அவர்களை தாக்குவது நல்லதல்ல என்று கடும் கோபத்துடன் பேசினார்.