புதுச்சேரியில் ரூ.436 கோடியில் புதிய மேம்பாலம்

புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புதுச்சேரியில் இந்திராகாந்தி - ராஜீவ்காந்தி சதுக்கம் இடையே ரூ.436 கோடியில் புதிய மேம்பால கட்டுமான பணியை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி 13ம் தேதி அடிக்கல் நாட்டி துவக்கி வைக்கிறார்.

Continues below advertisement

நாளுக்குநாள் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்

புதுச்சேரியில் நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகையால் நகரம் எங்கும் வாகன நெரிசல் நிலவுகிறது. இதனால் புதுச்சேரி மாநில மக்கள் வார இறுதி நாட்களில் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சுகின்றனர்.

இந்த நிலையில் நெரிசலுக்கு தீர்வு காண அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டு வருகிறது. அந்த வகையில் கடலுார் சாலை ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. அதுபோல் கிழக்கு கடற்கரை சாலையில் வெளி மாநில பேருந்துகளுக்கான பேருந்து நிலையம் அமைக்கப்பபட உள்ளது.

Continues below advertisement

இந்திரா சதுக்கம் முதல் ராஜீவ் சதுக்கம் வரை 3.8 கி.மீ தொலைவுக்கு மேம்பாலம்

புதுச்சேரி நகரின் மையமான இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி சதுக்கத்தை வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்று கடக்கும் நிலை உள்ளது. இந்த 2 சதுக்கங்களையும் இணைத்து மேம்பாலம் கட்ட அரசு முடிவு செய்தது. இதற்காக மத்திய அரசின் 100 சதவீத நிதியை பெற திட்ட வரையறை அனுப்பியது. இதனையடுத்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பல்வேறு ஆய்வு செய்தனர். இதன் பிறகு, இந்திரா சதுக்கம் முதல் ராஜிவ் சதுக்கம் வரை 3.8 கி.மீ தொலைவுக்கு மேம்பாலம் கட்டும் திட்டத்திற்கு 100 சதவீத நிதி உதவியாக ரூ.436.18 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

மேம்பாலம் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா 13ம் தேதி நடக்கிறது. விழாவில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி பங்கேற்க உள்ளார். விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், சட்டப்பேரவையில் உள்ள பொதுப்பணித்துறை அமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்க்கு அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி வீரேந்திர சம்பால், திட்ட அதிகாரி வரதராஜன், புதுச்சேரி பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

30 மாதங்களில் கட்டி முடிக்க அரசு நடவடிக்கை

பின்னர் விழா நடைபெறும் இடமான தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக்கூட இடம் மற்றும் பாலம் அமையும் இடங்களை பார்வையிட்டனர். தேசிய நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் பன்னீர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர். மேம்பால கட்டுமான பணியை டிசம்பர் மாதம் தொடங்கி 30 மாதங்களில் கட்டி முடிக்க அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.