புதுச்சேரி தாகூர் அரசு கலைக்கல்லூரியின் வளாகத்தை பசுமை வனமாக மாற்றியுள்ளார் கல்லூரியின் முதல்வர் சசிகாந்த் தாஸ். புதுச்சேரி பகுதியில் உள்ள லாஸ்பேட்டையில் பழமையான சிறப்புமிக்க தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது இதில் கல்லூரி முதல்வராக சசிகாந்த் தாஸ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தான் பணியாற்றக்கூடிய கல்லூரியின் 15 ஏக்கர் தரிசு நிலத்தை சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பசுமையாக மாற்ற கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக மரங்களை நட்டு அதனைப் பாதுகாத்து வருகிறார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 5 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு அதனை பாதுகாப்பான முறையில் பராமரித்து வருகிறார் கல்லூரியின் முதல்வர் சசிகாந்த் தாஸ். கல்லூரியின் வளாகம் தற்பொழுது பசுமை வனப்பகுதி போல் காணப்படுவதனால் கல்லூரி வரும் மாணவ மாணவிகள் இயற்கை சூழலில் படித்துக்கொண்டும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இதனை கல்லூரியின் முதல்வர் முன்னெடுத்து நடத்தி வருகிறார்.
இது குறித்து பேசிய கல்லூரி முதல்வர் கூறுகையில்,
5 ஆண்டுகளில் 5,000 மரங்கள் கொண்ட நகர்ப்புற காடுகளை தொடர்ச்சியான தோட்டக்கலை மூலம் உருவாக்கியுள்ளோம். கல்லூரிக்கு 20 முதல் 25 வகையான பறவைகள் சீரான இடைவெளியில் வந்து செல்கின்றன என்றும் அவர் கூறினார். தற்போது கோடை காலம் என்பதால் உயிர்வாழ்வதற்கு, போதுமான உணவு மற்றும் தண்ணீரை தேடி அலைகின்றன, இதனை கருத்தில் கொண்டு அவைகளுக்கு உணவு வழங்க வேண்டும் என கல்லூரி வனப்பகுதியில் தண்ணீர் மற்றும் தானியங்களை வைத்து உணவு அளித்து வருகிறார்.
கல்லூரியின் முதல்வர் சுற்றுச்சூழலைப் பேணுவதன் முக்கியத்துவத்தை மேலும் வலியுறுத்தியதுடன், தாமே வளாகத்தில் காய்கறித் தோட்டத்தை பராமரித்து வருவதாகக் குறிப்பிட்டார். வளாகத்தில் நடப்பட்டுள்ள மரங்கள் குறித்த விவரம் தெரிவித்த அவர், வளாகத்தில் பனை, தென்னை, சப்போட்டா, பலா, வாழை உள்ளிட்ட பல்வேறு மரங்கள் நடப்பட்டுள்ளன. இங்கு மாணவர்களுக்கு கல்வி கற்பது மட்டுமல்லாமல், கல்லூரி வளாகத்தில் புதிய மரங்கள் மற்றும் காய்கறிகளை விளைவிப்பது குறித்து அவர் வலியுறுத்தி வருகிறார்.
முன்னதாக, 2021 ஆம் ஆண்டில், கல்லூரி வளாகத்தில் சுமார் 3,000 மரங்களைக் கொண்ட பசுமையான காப்பகமாக 13 ஏக்கர் நிலத்தை மாற்றியது குறிப்பிடத்தக்கது. 1961 ஆம் ஆண்டு லாஸ்பேட்டையில் தொடங்கப்பட்ட கல்லூரி புதுச்சேரியின் முன்னணி கல்லூரிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இது கலை, வணிகம் மற்றும் அறிவியல் ஆகிய பல்வேறு துறைகளில் படிப்புகளை வழங்குகிறது. நாடு முழுவதும் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் அதன் பசுமை முயற்சிக்காக கல்லூரி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.