புதுச்சேரி: 2026-ஆம் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி, புதுச்சேரியின் காவல் தெய்வமாகப் போற்றப்படும் உலகப் புகழ்பெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Continues below advertisement

ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவில் தரிசனம்

புதுச்சேரியில் 2026-ஆம் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி, புதுச்சேரியின் காவல் தெய்வமாகப் போற்றப்படும் உலகப் புகழ்பெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

புத்தாண்டு தினமான இன்று, அதிகாலை 4:00 மணிக்கே மணக்குள விநாயகர் கோவிலின் நடை திறக்கப்பட்டது. விடியற்காலை முதலே உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளிமாநிலங்களில் இருந்து வருகை தந்த சுற்றுலாப் பயணிகளும் விநாயகரைத் தரிசிக்கக் கோவிலின் வெளியே நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

Continues below advertisement

சிறப்பு அபிஷேகம் மற்றும் தங்கக் கவசம்

புத்தாண்டை முன்னிட்டு மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திக்கு பால், தயிர், இளநீர், பன்னீர் மற்றும் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனைத் திரவியங்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, மூலவர் விநாயகப் பெருமானுக்கு ஜொலிஜொலிக்கும் தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. உற்சவர் மூர்த்தி 'ராஜ அலங்காரத்தில்' பக்தர்களுக்குக் காட்சி அளித்தார். இந்தத் தெய்வீகக் காட்சியைக் கண்ட பக்தர்கள் "கணபதி பாப்பா மோரியா" எனப் பக்தி முழக்கமிட்டு வழிபட்டனர்.

பக்தர்களுக்கு லட்டு பிரசாதம்

ஆண்டின் முதல் நாளைப் பக்தி உணர்வுடன் தொடங்க விரும்பிய மக்களுக்குக் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தரிசனம் முடித்து வந்த பக்தர்கள் அனைவருக்கும் இனிப்பாக லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.

மணக்குள விநாயகர் கோவில் மட்டுமின்றி, புதுச்சேரியில் உள்ள புகழ்பெற்ற வரதராஜப் பெருமாள் கோவில், வேதபுரீஸ்வரர் கோவில், காமாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்துத் திருத்தலங்களிலும் அதிகாலை முதலே சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதனால் புதுச்சேரி நகரமே ஆன்மீக மணம் கமழ்ந்து காணப்பட்டது. வருடத்தின் முதல் நாளை முழுமுதற் கடவுளான விநாயகரின் தரிசனத்துடன் தொடங்கியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக பக்தர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.