புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் மக்களை சந்திக்கும் நிகழ்வில் போலீசார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்தை கடுமையாக எச்சரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு

2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக அரசியல் களம் கண்டுள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் மாதம் முதல் மாவட்ட வாரியாக பொதுமக்களை சந்தித்து வந்திருந்தார். இப்படியான நிலையில் செப்டம்பர் 27ம் தேதி கரூரில் அவர் பரப்புரை மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இதனைத் தொடர்ந்து விஜய் தனது பரப்புரையை ஒத்தி வைத்தார். பாதுகாப்பு சூழலை கருத்தில் கொண்டு அவருக்கு இதுவரை தமிழ்நாட்டில் பரப்புரை மேற்கொள்ள போலீசார் அனுமதி மறுத்து வருகின்றனர். இதன்பின்னர் சுங்குவார்சத்திரத்தில் இயங்கும் தனியார் கல்லூரியில் கடந்த நவம்பர் மாதம் கடைசி வாரத்தில் மக்கள் சந்திப்பு நடைபெற்றது. அதன்பின்னர் முதல்முறையாக அவர் பொதுவெளியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை இன்று நடத்துகிறார். 

Continues below advertisement

நிபந்தனைகளை காற்றில் பறக்க விட்ட தொண்டர்கள்

இதனிடையே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் விஜய் ரோடு ஷோ நடத்த வேண்டும் எனக் கோரி காவல்துறையில் மூன்று முறை அனுமதி கேட்கப்பட்டது.  ஆனால் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுத்த புதுச்சேரி அரசு திறந்தவெளி மைதானத்தில் வேண்டுமென்றால் கூட்டம் நடத்திக் கொள்ளலாம் என தெரிவித்தது. அதன்படி டிசம்பர் 9ம் தேதியான இன்று பொதுக்கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. 

இந்த கூட்டத்தில் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த 5000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை எனவும் சொல்லப்பட்டது. பங்கேற்பவர்களுக்கு க்யூ ஆர் கோடுடன் அனுமதி அட்டை வழங்கப்பட்டது. ஆனால் இன்று காலையில் பொதுக்கூட்டம் நடைபெறும் புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் கட்டுக்கடங்காத வகையில் தொண்டர்கள், ரசிகர்கள் கூட்டம் கூடியது. 

அனுமதி அட்டை வைத்திருந்தவர்கள் மட்டுமல்லாமல் பாஸ் இல்லாதவர்களும் தடுப்புகளை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தனர். மேலும் வாசலில் பொதுச்செயலாளர் ஆனந்த் தனக்கு வேண்டியவர்களை உள்ளே விட்டார். அவரை புதுச்சேரி பெண் எஸ்.பி., ஈஷா சிங் கடுமையாக எச்சரிக்கை விடுத்தார். உங்களால் 40 பேர் இறந்திருக்கிறார்கள். நான் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் சொல்லாதீர்கள் என தெரிவித்தார். 

போலீசாரின் கட்டுப்பாடுகளை மீறி தொண்டர்கள் செயல்பட்டதால் தவெகவுக்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் வந்துள்ளதால் நிகழ்ச்சிக்குப் பின் விதிகளை மீறியதாக  தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என சொல்லப்படுகிறது.