புதுச்சேரி: பொங்கல் பண்டிகையொட்டி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக ரூ.750 பணம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.


புதுச்சேரியில் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு பதிலாக ரொக்கம் தர அனுமதி கேட்டு அம்மாநில கவர்னருக்கு கோப்பு அனுப்பப்பட்ட நிலையில் அளித்துள்ளார்.


தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. பரிசு தொகுப்பை பயனாளிகளுக்கு வினியோகிக்கும் நடவடிக்கைகளும் வேகம் எடுக்க தொடங்கி இருக்கின்றன. குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று முதல் டோக்கனும் வினியோகிக்கப்பட்டு வருகிறது. அந்த டோக்கனில் எந்த தேதியில் சென்று பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என்பது பற்றிய விவரம் இடம்பெற்றுள்ளது.


தமிழகத்தை போன்று அண்டை மாநிலமான புதுச்சேரியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இன்றைய தேதி வரை அதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு உள்ளனவா என்பது பற்றிய விவரங்கள் வெளியாகாமல் இருந்தது, பொங்கலுக்கு 10 நாட்களே இருப்பதால் அதற்குள் அனைத்து பணிகளும் முடிந்து பயனாளிகளுக்கு பரிசுத் தொகுப்பு வினியோகிக்க முடியுமா என்பது தெரியவில்லை. பரிசுத் தொகுப்பு அறிவிப்பு எப்போது என்ற எதிர்பார்ப்பும் மக்களிடம் எழுந்த நிலையில் பொங்கல் தொகுப்புக்கு மாற்றாக ரேஷன் அட்டை உரிமைதாரர்களுக்கு ரொக்கப்பணம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதாவது இம்முறை ரூ.750 வழங்க முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். பொங்கல் தொகுப்பு பணத்தை பயனாளிகள் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் எனக் குறிப்பிட்டார்.