புதுச்சேரி: தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்களில் தொடர்ந்து கைவரிசை காட்டி, காவல்துறையினருக்கு பெரும் சவாலாக விளங்கிய மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல "த்ரீ ரோஸஸ்" (Three Roses) பெண் திருட்டுக் கும்பலை புதுச்சேரி காவல்துறையினர் மாறுவேடத்தில் சென்று கையும் களவுமாகப் பிடித்துள்ளனர்.

Continues below advertisement

யார் இந்த "த்ரீ ரோஸஸ்" கும்பல்?

மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த குஷ்பு, மீனாட்சி, லட்சுமி ஆகிய மூவரும் ஒரு கூட்டணியாக இணைந்து மாநிலம் விட்டு மாநிலம் சென்று தொடர் திருட்டுகளில் ஈடுபட்டு வந்தனர். கோவில் திருவிழாக்கள், நெரிசல் மிகுந்த துணிக்கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களை மட்டுமே இவர்கள் குறிவைப்பார்கள். கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, பொதுமக்களின் கவனத்தை மிகச் சாமர்த்தியமாக வேறு பக்கம் திருப்பி, கண்ணிமைக்கும் நொடியில் பணம், நகை மற்றும் விலை உயர்ந்த பொருட்களை அபேஸ் செய்வதில் இவர்கள் கைதேர்ந்தவர்கள். இவர்களின் இந்தத் தொடர் திருட்டுச் சம்பவங்களால், இரு மாநில போலீசாரும் இந்த மூன்று பேருக்கும் "த்ரீ ரோஸஸ்" என்று செல்லப்பெயரிட்டு தீவிரமாகத் தேடி வந்தனர்.

மாம்பலத்தில் கைவரிசை... புதுச்சேரிக்கு எஸ்கேப்!

தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டி வந்த இக்கும்பல், சமீபத்தில் சென்னை மாம்பலத்தில் உள்ள இரண்டு பிரபல துணிக்கடைகளுக்குள் வாடிக்கையாளர்கள் போல நுழைந்து நகைகளையும் பணத்தையும் திருடிக்கொண்டு தப்பியோடினர்.

Continues below advertisement

இது குறித்து மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தியதில், அந்த கும்பல் சென்னையில் இருந்து தப்பி புதுச்சேரிக்குச் சென்றுள்ள தகவல் ரகசியமாகத் தெரியவந்தது.

புகைப்படம் அனுப்பி எச்சரிக்கை!

தகவல் அறிந்ததும், தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநில போலீசார் அந்த மூன்று பெண்களின் புகைப்படங்களையும் புதுச்சேரி மாநில காவல்துறைக்கு உடனடியாக அனுப்பி வைத்தனர். புதுச்சேரியில் அவர்கள் தென்பட்டால் உடனடியாகப் பிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, புதுச்சேரி குற்றப்பிரிவு (Crime Branch) போலீசார் புதுச்சேரியின் முக்கிய வணிகப் பகுதிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

மாறுவேடத்தில் சென்று வளைத்துப் பிடித்த புதுச்சேரி போலீசார்

புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள ஒரு பிரபல துணிக்கடையில், தேடப்பட்டு வந்த இந்த மூன்று பெண்களும் நகைகளைத் திருட முயன்று கொண்டிருப்பதை ரோந்து பணியில் இருந்த போலீசார் கண்டறிந்தனர்.

அவர்களைத் தப்பிக்க விடாமல் கையும் களவுமாகப் பிடிக்க முடிவெடுத்த புதுச்சேரி குற்றப்பிரிவு போலீசார், உடனடியாக சாதாரண உடையில் வாடிக்கையாளர்கள் போல மாறுவேடம் அணிந்து துணிக்கடைக்குள் நுழைந்தனர். பின்னர், சரியான தருணத்தில் அந்த மூன்று பெண்களையும் நாலாபுறமும் சுற்றிவளைத்து அதிரடியாகக் கைது செய்தனர்.

சென்னை போலீசாரிடம் ஒப்படைப்பு - விசாரணை தீவிரமாகிறது!

கைது செய்யப்பட்ட மூவரிடமும் புதுச்சேரி பெரியகடை காவல் நிலையத்தில் வைத்து நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில், அவர்கள் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த குஷ்பு, மீனாட்சி மற்றும் லட்சுமி என்பதும், தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் என்பதும் உறுதியானது.

தகவல் அறிந்ததும் சென்னை மாம்பலம் தனிப்படை போலீசார் மற்றும் ஆந்திர மாநில போலீசார் புதுச்சேரிக்கு விரைந்தனர். சென்னையில் பதிவான திருட்டு வழக்குகள் தொடர்பாக அந்த மூன்று பெண்களையும் புதுச்சேரி போலீசார் சென்னை மாம்பலம் போலீசாரிடம் முறைப்படி ஒப்படைத்தனர்.

தற்போது அவர்களைச் சென்னைக்கு அழைத்து வந்துள்ள போலீசார்:

இவர்கள் வேறு எந்தெந்த மாநிலங்களில் கைவரிசை காட்டியுள்ளனர்? இவர்களுக்குப் பின்னால் வேறு ஏதேனும் பெரிய திருட்டுக் கும்பல் அல்லது நெட்வொர்க் இயங்கி வருகிறதா? திருடிய பொருட்களை எங்கெல்லாம் விற்றுள்ளனர்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பல நாட்களாக இரு மாநில போலீசாருக்கும் 'தண்ணி காட்டி' வந்த "த்ரீ ரோஸஸ்" பெண் திருட்டுக் கும்பல் தற்போது சிக்கியுள்ள சம்பவம், சென்னை மற்றும் புதுச்சேரி வியாபாரிகள் இடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.