தகுதியுடன் தான் ஆளுநர் பொறுப்புக்கு வந்துள்ளதாகவும், இணையதளங்களில் என்னை மோசமாக விமர்சித்தால் நடவடிக்கை எடுப்பேன் என்றும் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் மோடியின் 20 ஆண்டுகால அரசியல் பயண புத்தகமான மோடி20 நனவாகும் கனவுகள், மோடியும் அம்பேத்கரும் ஆகிய இரு புத்தகங்களின் தமிழாக்கம் வெளியீடு நிகழ்ச்சி புதுச்சேரி காமராஜர் மணிமண்டபத்தில் நடந்தது. இதில் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம் மற்றும் கால்நடை, பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டார். விழாவில் ஆளுநர் தமிழிசை கலந்துகொண்டு புத்தகங்களை வெளியிட முதலமைச்சர் ரங்கசாமி பெற்றுக்கொண்டார்.


ஆளுநர் தமிழிசை பேசியதாவது:-


பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் நல்லாட்சி குறித்து மக்களுக்கு தெரிவிக்க இந்த புத்தகங்கள் தமிழில் வந்துள்ளன. அவரது நல்ல திட்டங்களை விமர்சிப்பவர்கள் இந்த புத்தகத்தை படிக்கவேண்டும். அவர் புதுவையை 'பெஸ்ட்' புதுச்சேரி ஆக்குவோம் என்றார். ஆனால் இங்கு சிலர் 'டெஸ்ட்' புதுச்சேரி என்கிறார்கள். டெஸ்ட் வைத்தால் தான் சிறந்ததாக ஆக முடியும். கொரோனா காலத்தில் மனவேதனையோடு பிரதமர் ஊரடங்கு அறிவித்தார். அவ்வாறு அறிவிக்காவிட்டால் மக்களை காப்பாற்றி இருக்க முடியாது என்று ஆக்ஸ்போர்டு ஆய்வுகள் தெரிவித்துள்ளன. உயிர் இருந்தால் பொருளாதாரத்தை நாம் எப்போதும் தேடிக்கொள்ளலாம் என்றார் பிரதமர்.


புதுவையில் கொரோனா 2-வது அலையின் போது 70 நாட்கள் ஜனாதிபதி ஆட்சி நடந்து கொண்டிருந்தது. இரவு 11.30 மணிக்கு பிரதமர் தொடர்புகொள்வார். நமது தேவைகள் குறித்து நாம் சொல்லும் முன்பே தேவையான ஆக்சிஜன், வெண்டிலேட்டரையும் அவரே தெரிவித்து விடுவார். அந்த அளவுக்கு அவர் புதுவை மீது அக்கறை எடுத்துக்கொண்டார். திட்டம் போடுவது பெரிதல்ல. அதை செயலாற்றாவிட்டால் நம்மை விடமாட்டார். அப்படிப்பட்ட தலைவர்தான் மோடி என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். இந்த நாட்டை எப்படி மேம்படுத்த வேண்டும் என்று நினைத்தாரோ, அதற்காக அவர் பல விமர்சனங்களை தாங்கிக்கொண்டுள்ளார்.


விமர்சனங்களை சாப்பிடுவதால் தான் சுறுசுறுப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் பிரதமர் ஒரு முடிவு எடுத்தால் அது மக்களுக்கான முடிவாகத்தான் இருக்கும். அதேபோல் அவரிடம் பாடம் கற்ற நாங்கள் எடுக்கும் முடிவும் மக்களுக்கான முடிவாகத்தான் இருக்கும். அத்தகைய பாடத்தைத்தான் நாங்கள் அவரிடம் கற்றுள்ளோம். ஒரு ஆளுநரை விமர்சிக்கும் போது, மிகவும் மோசமாக விமர்சனங்கள் உள்ளது. அவ்வாறு செய்தால் இனி விமர்சிக்க முடியாத அளவுக்கு நடவடிக்கைகள் இருக்கும். தகுதி அடிப்படையில்தான் நாங்கள் பொறுப்புக்கு வந்துள்ளோம்.


பிரதமர் மோடி மட்டும் கொரோனா காலத்தில் இல்லாமல் இருந்திருந்தால் நாடு பேரிழப்பை சந்தித்திருக்கும். தடுப்பூசி கொடுத்ததற்கும் அவரை விமர்சித்தார்கள். இந்த நிமிடம்வரை 219 கோடியே 33 லட்சத்து 43 ஆயிரத்து 651 தடுப்பூசிகள் கொடுக்கப்பட்டுள்ளது. முதலில் தடுப்பூசியை விமர்சனம் செய்தவர்களுக்கு இப்போது உண்மை புரிகிறது. சீனா மீண்டும் பெருந்தொற்றல் மூடிக்கிடக்கிறது. ஆனால் தடுப்பூசி காரணமாக இந்தியாவில் நாம் கூடிக்கிடக்கிறோம். இப்போது குண்டு துளைக்காத கவச உடை, வெண்டிலேட்டர் என பலவற்றை தயாரிக்கிறோம். இதற்கு பிரதமர் அளித்த ஊக்கம்தான் காரணம் என ஆளுநர் தமிழிசை கூறினார்.