குடியரசு தினவிழா: புதுச்சேரி ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி வாழ்த்து
புதுச்சேரி ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி குடியரசு தின வாழ்த்து
துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் குடியரசு தின வாழ்த்துச் செய்தி:
புதுச்சேரி வாழ் மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த குடியரசு தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நன்னாளில் பெருமைக்குரிய இந்திய ஜனநாயகத்தை உருவாக்கிக் கொடுத்த நமது தேசியத் தலைவர்களின் மாண்புகளையும் கோட்பாடுகளையும் போற்ற வேண்டும். உலக நாடுகள் எல்லாம் வியந்து கவனிக்கும் அளவிற்கு இந்நிய ஜனநாயகம் வளர்ச்சி அடைந்திருக்கிறது. ஜி 20 மாநாட்டிற்கு தலைமை ஏற்று உலக நாடுகளை வழி நடத்தும் பெருமையை இன்று இந்தியா பெற்றிருக்கிறது. அதன் முதல்நிலை மாநாடு புதுச்சேரியில் நடைபெற இருக்கிறது. இது நம் அனைவரும் பெருமைபடத்தகுந்த தருணம். நமது பாரம்பரியம், கலை. கலாச்சாரம்.
திறமை அனைத்தையும் உலக அளவில் பறைசாற்ற கிடைத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பு. பாரதப் பிரதமரின் வழிகாட்டுதலில் மத்தய அரசின் ஒத்துழைப்போடு சிறந்த மாநிலமாக புதுச்சேரி மாநிலம் வளர்ச்சி பெற்று வருகிறது. ஒத்துழைப்பு அளித்துவரும் மக்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது உளம் கனிந்த குடியரசு தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல்வர் ரங்கசாமி குடியரசு தின வாழ்த்துச் செய்தி:
மக்களாட்சி தத்துவத்திற்கு இலக்கணமாக, உலகிலேயே அதிக மக்கள் சக்தி கொண்ட மாபெரும் குடியரசு நாடாக இந்தியா இன்றளவும் திகழ்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு முக்கியக் காரணமாக அமைந்த, நமது அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாளைத்தான் ஆண்டுதோறும் ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினமாகக் கொண்டாடி வருகிறோம். ஜி20 நாடுகளின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்கும் நிலைக்கு உயர்ந்திருப்பதே இதற்குச் சிறந்த சான்றாகும். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த உயரிய பொறுப்பை இந்தியா ஏற்றிருப்பது நம்மையெல்லாம் பெருமிதம் கொள்ளச்செய்துள்ளது. சின்னஞ்சிறிய மாநிலமான புதுச்சேரியில், ஜி20 மாநாட்டின் கூட்டம் நடைபெறுவது நமக்கு மகிழ்ச்சியும் பெருமையும் அளிப்பதாக உள்ளது.
நமது பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு, கலை போன்றவைகளை உலகின் பார்வைக்கு கொண்டு சேர்க்க இந்தக் கூட்டம் வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை. சிறிய மாநிலமாக இருந்தாலும், முன்னேறிவரும் பெரிய மாநிலங்களுக்கு முன்னோடியாக நமது புதுச்சேரி மாநிலம் விளங்கிக்கொண்டிருக்கிறது. கல்வி மற்றும் மருத்துவ சேவைகளைத் தொடர்ந்து, சமூக நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருவதிலும் சிறந்து விளங்கி வருகிறது. அண்மையில் வெளியான மத்திய அரசின் சமூக முன்னேற்ற குறியீட்டு அறிக்கை இதனை உறுதிப்படுத்துவதாக உள்ளது. எனது அரசு, அனைத்து தரப்பு மக்களின் நலனிலும் வளர்ச்சியிலும் தனிக்கவனம் செலுத்தி வருகிறது என்பதற்கு இது ஒரு சான்று ஆகும்.
இந்த இனிய நன்னாளில், நாட்டு விடுதலைக்காக தங்களது உடல், பொருள், ஆவியை அர்ப்பணித்த தலைவர்களையும், அரசியலமைப்பு சாசனத்திற்கு வித்திட்ட தலைவர்களையும் போற்றி வணங்குவதைக் கடமையென கொள்வோம் எனக்கூறி அனைவருக்கும் எனது குடியரசு தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
என்ன செய்ய வேண்டும்?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்