புதுச்சேரி: புதுச்சேரியில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் 'பர்சனல் செகரட்டரி' வேலை தருவதாக ஆசைவார்த்தை கூறி, கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை அடுக்குமாடி குடியிருப்பில் தங்க வைத்து பலாத்காரம் செய்ததோடு, அவரிடமிருந்து ரூ.5 லட்சம் பணத்தையும் பறித்த கடலூர் தொழிலதிபரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

Continues below advertisement

வேலை தேடிய பெண்ணுக்கு வலைவீச்சு:

கேரள மாநிலம் திருவனந்தபுரம் தள்ளம்பளம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் வேலை தேடி வந்துள்ளார். அப்போது, புதுச்சேரி கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் நிறுவனத்தின் நிறுவனரும், கடலூர் மாவட்டம் குடிகாடு பகுதியைச் சேர்ந்தவருமான லட்சுமிகாந்தன் (42) என்பவருடன் வேலை தொடர்பாகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அந்த உரையாடலின் போது, தனக்கு 'பர்சனல் செகரட்டரி' (தனிச் செயலாளர்) வேலைக்கு ஆட்கள் தேவைப்படுவதாகவும், அதற்கு மாதச் சம்பளமாக ரூ.1 லட்சம் வழங்குவதாகவும் லட்சுமிகாந்தன் ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

அடுக்குமாடி குடியிருப்பில் சிறைவாசம்:

லட்சுமிகாந்தனின் பேச்சை உண்மை என நம்பிய அந்த இளம்பெண், தனது உடைமைகளுடன் கடந்த மே மாதம் 20-ஆம் தேதி புதுச்சேரிக்கு வந்துள்ளார். மறுநாள் (மே 21) அந்தப் பெண்ணை நேரில் சந்தித்த தொழிலதிபர் லட்சுமிகாந்தன், தனது காரில் அழைத்துச் சென்று கிருமாம்பாக்கம் ராதாநகர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனி அறையில் தங்க வைத்துள்ளார்.

Continues below advertisement

பணப்பறிப்பு மற்றும் கொடூர பலாத்காரம்:

பெண்ணை அறையில் தங்க வைத்த சில நாட்களிலேயே லட்சுமிகாந்தன் தனது சுயரூபத்தைக் காட்டத் தொடங்கியுள்ளார். கடந்த மே மாதம் 25-ஆம் தேதி இளம்பெண் தங்கியிருந்த அறைக்கு வந்த லட்சுமிகாந்தன், தனக்கு அவசரமாகப் பணம் தேவைப்படுகிறது எனக் கூறி அந்தப் பெண்ணிடம் இருந்து ரூ.5 லட்சம் ரொக்கப் பணத்தைப் பெற்றுள்ளார்.

அதன்பின்னர், ஜூன் மாதம் முதல் வாரத்தில் ஒரு நாள் நள்ளிரவில் முழு போதையில் அந்தப் பெண்ணின் அறைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். இளம்பெண் தடுத்தும் கேட்காமல், அவரை வலுக்கட்டாயமாகப் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் நிலைகுலைந்து போயுள்ளார்.

போலீசில் புகார் - தொழிலதிபர் கைது:

தனக்கு நேர்ந்த இந்தக் கொடுமைகள் குறித்தும், லட்சுமிகாந்தனின் அச்சுறுத்தல்கள் குறித்தும் யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்து வந்த அந்தப் பெண், ஒருவழியாகத் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் உடனடியாக விசாரணையில் இறங்கினர். பலாத்காரம், மோசடி, மிரட்டல் உள்ளிட்ட 4 கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக முயன்ற தொழிலதிபர் லட்சுமிகாந்தனை மடக்கிப் பிடித்து அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் புதுச்சேரி மற்றும் கடலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.