Jose Charles Martin: மதத்தைக் காட்டி ஜோஸ் மார்ட்டினுக்கு அமைச்சர் பதவி மறுப்பா? பாண்டிச்சேரியில் நடப்பது என்ன?
ஜோஸ் மார்ட்டின் சிறுபான்மையின சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு அமைச்சர் பதவி மறுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டைப் போலவே பாண்டிச்சேரியிலும் கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அங்கு தமிழக வெற்றிக் கழகத்தைப் போன்று புதியதாக களமிறங்கிய கட்சி லட்சிய ஜனநாயக கட்சி.
ஜோஸ் மார்ட்டினுக்கு அமைச்சர் பதவி மறுப்பு:
என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணியில் இடம்பிடித்த லட்சிய ஜனநாயக கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. நெல்லித்தோப்பு தொகுதியில் ஜெயக்குமார் போட்டியிட்ட நிலையில், காமராஜ் நகர் தொகுதியில் ஜோஸ் மார்ட்டின் போட்டியிட்டார்.
வலுவான திமுக - காங்கிரஸ் - விசிக கூட்டணி, புதிய வரவான தமிழக வெற்றிக் கழகத்தை எதிர்த்து லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் மார்ட்டின் காமராஜ் நகர் தொகுதியில் வெற்றி பெற்றார். இந்த சூழலில், புதியதாக பாண்டிச்சேரியில் பொறுப்பேற்றுள்ள ரங்கசாமியின் அமைச்சரவையில் ஜோஸ் மார்ட்டினும் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கவில்லை.
காரணம் என்ன?
10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மார்ட்டினுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்காதது அவரது கட்சியினர் பலருக்கும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. நமச்சிவாயம் மற்றும் மல்லாடி கிருஷ்ணராவ் ஆகியோருக்கு மட்டுமே அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 18 இடங்களில் என்ஆர்காங்கிரஸ் - பாஜக கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், மற்ற அமைச்சர்கள் யாரும் இதுவரை நியமிக்கப்படவில்லை.
அதிமுக-வைக் காட்டிலும் பாண்டிச்சேரியில் அதிக வாக்குகள் பெற்ற லட்சிய ஜனநாயக கட்சியின் சார்பில் ஜோஸ் மார்ட்டினுக்கு அமைச்சரவையில் இடம் தர சிலர் தயங்குவதாக கூறப்படுகிறது. சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி தயக்கம் காட்டுவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால், லட்சிய ஜனநாயக கட்சியினர் தங்களது ஆதங்கத்தையும், அதிருப்தியையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர்.
குவியும் கண்டனங்கள்:
பாண்டிச்சேரி அரசை வழிநடத்தும் முதலமைச்சர் ரங்கசாமி லட்சிய ஜனநாயக கட்சித் தலைவரான ஜோஸ் மார்ட்டினுக்கு அமைச்சரவையில் இடம் வழங்க வேண்டும் என்று அவரை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். பாஜக மீது மதச்சார்புள்ள கட்சி என்ற முத்திரை உள்ள சூழலில், மார்ட்டினுக்கு அமைச்சர் பதவி மறுக்கப்படுவது என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணிக்கு பாண்டிச்சேரியில் பின்னடைவை உருவாக்கி வருகிறது.
இந்த சூழலில், தொடர்ந்து வரும் எதிர்ப்புகள், விமர்சனங்களால் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினுக்கு அமைச்சரவையில் முதலமைச்சர் ரங்கசாமி இடம் அளிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ரங்கசாமி தனது அமைச்சரவையில் இடம் அளிக்காமல் இருப்பதற்கு பாஜக, அதிமுக-வும் காரணமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஜோஸ் மார்ட்டினின் தாயார் லீமா ரோஸ் மார்ட்டின் அதிமுக சார்பில் தமிழ்நாட்டில் போட்டியிட்டு லால்குடி தொகுதியில் வெற்றி பெற்றார். ஜோஸ் மார்ட்டினின் சகோதரி கணவர் ஆதவ் அர்ஜுனா தவெக சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் வெற்றி பெற்று தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்.
Before You Go
Pink Police Booth : தமிழகத்திலேயே முதன்முறை! 24 மணி நேர கண்காணிப்பு..பொன்னேரியில் போலீஸ் பிங்க் பூத்
ட்ரெண்டிங் செய்திகள்






















